Tamilnadu

“கருணாநிதி முதல் கேள்வி எழுப்ப.. பதிலளித்த மு.க.ஸ்டாலின்” : சட்டப்பேரவை வரலாற்றில் சிறப்பான சம்பவம்!

தி.மு.க ஆட்சியமைந்தால் சட்டமன்ற கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்ய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி பதில் நேரம் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு பிறகு நடத்தப்பட்ட அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஜனவரி 7 வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என முடிவு எட்டப்பட்டது.

அதன்படி ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர். அதன் பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கூட்டத்தொடரின் அனைத்து நிகழ்வுகளும் யூடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேனலிலும் பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

கேள்வி நேரத்தில் முதலாவதாக பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதி, மெட்ரோ ரயில் சேவை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சென்னை மாநகருக்கான புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருவதன் காரணமாக மெட்ரோ ரயில் இணைப்பை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதனைக் கருதி, இந்தத் தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் பன்னாட்டு நிறுவனத்தின் மூலமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான இறுதித்திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் தற்போது இருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பணிகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்வு முதல்முறையாக நேரலையாக ஒளிபரப்பான நிலையில், அதன் முதல் கேள்வியை சட்டமன்றத்தில் பொன்விழா கண்ட முதுபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் பெயர்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எழுப்பியதும், கலைஞரின் புதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு பதிலளித்ததும் சிறப்பான தருணமாகப் பார்க்கப்படுகிறது.

1957-ம் ஆண்டு தொடங்கி 2016 வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள், முதலமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை ஏற்று சட்டமன்றத்தில் பணியாற்றி உள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர். அதே சட்டமன்றத்தில் அவரது பெயர்கொண்ட தி.மு.க எம்.எல்.ஏ எழுப்பிய கேள்வி பேரவை வரலாற்றில் முதல்முறையாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

Also Read: நேரலையில் பேரவை நிகழ்வுகள்; தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை; வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க அரசு!