Tamilnadu
உ.பியில் இருந்தபடியே சென்னையில் கொள்ளை: Sim Swap மூலம் நூதன மோசடி; கையும் களவுமாக சிக்கிய வடமாநில கும்பல்
SIM SWAP முறையில் மோசடி செய்த கும்பலை இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், SIM Swap எனும் நூதன முறையில் மோசடி செய்து மருத்துவமனை நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 25 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வடமாநில கும்பலை மேற்கு வங்காளத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த அடிப்படையில், கைது செய்யப்பட்ட ரோகன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராய் ஆகிய 4 பேரையும் கடந்த இரண்டு நாட்களாக சைபர் கிரைம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி கும்பல் தலைவன் சதிஷ் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கி இருப்பதை சைபர் க்ரைம் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கும்பல் தலைவனை பிடிக்க தனிப்படை போலிஸ் உத்தர பிரதேசம் விரைந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரில், ஒருவருக்கு மட்டுமே இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது என்பது தெரிந்து ஈடுபட்டதாக போலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மோசடி செய்யும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றி அதை ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தரகர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கும்பல் தலைவன் சதிஷ் என்பவர் யார் யாரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் மற்றும் எத்தனை பேரை இந்த முறையில் மோசடி செய்துள்ளார் என்பது குறித்த தகவல்களை வாக்குமூலமாக பெற்றுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பயன்படுத்திய வங்கிக்கணக்கு அனைத்தும் போலி முகவரிகள், போலி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளை உருவாக்கியதை கண்டறிந்த போலிஸார், இந்த போலி ஆதார் அட்டை குறித்து ஆதார் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடிதம் எழுதியுள்ளனர்
மேலும் இந்த நூதன முறை மோசடியில் முக்கியமாக பார்க்கப்படும் Sim Swap முறை குறித்து சம்பந்தப்பட்ட சிம்கார்டு மண்டல அதிகாரியிடம் விளக்கம் கேட்பதற்கு போலிசார் அழைத்துள்ளனர். குறிப்பாக முறையாக சோதனை செய்யாமல் ஆன்லைன் மூலம் சிம் கார்டு மாற்றப்பட்டது எப்படி என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மண்டல அதிகாரியிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான மோசடி கும்பலிடம் இருந்து 14 மொபைல் போன்கள், 105 சிம் கார்டுகள், 154 டெபிட் கார்டுகள், 22 போலி பான் கார்டுகள், 128 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!