Tamilnadu

நேரலையில் பேரவை நிகழ்வுகள்; தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை; வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க அரசு!

2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று (ஜன.,5) தொடங்கியது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு பிறகு நடத்தப்பட்ட அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் ஜனவரி 7 வரை சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதாக முடிவு எட்டப்பட்டது.

அதன்படி ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர்.

அதன் பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. கூட்டத்தொடரின் அனைத்து நிகழ்வுகளும் யூடியூப் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் திட்டம். அதனை நிறைவேற்றும் விதமாக இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு தெரிவிக்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேனலிலும் பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருப்பதற்கு அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பளித்ததோடு பாராட்டியும் வருகிறார்கள்.

Also Read: ”ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி” - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!