Tamilnadu
“தியாகராய நகரில் மழைநீர் தேங்கியதற்கு காரணமே நீங்கதான்” : EPS கேள்விக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் பெய்த மழையினால் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியதாகவும், 5 மாதம் கால ஆட்சியில் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் சென்னையில் மழை பாதிப்பை தடுத்திருக்கலாம் எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அ.தி.மு.க ஆட்சியில் தூர்வாரியிருந்தால், தற்போது சென்னையில் தண்ணீர் தேங்கி இருக்காது என்றும், 2,700 கி.மீ சென்னையில் வடிகால் உள்ளதாகவும்,
பருவமழைக்கு 3 மாதம் காலத்திற்கு முன்பே பணிகள் ஆரம்பித்து செயல்படுத்தியதால் தான் சென்னை ஓரளவு தப்பித்ததாகவும் கூறினார்.
மேலும், வரும் காலத்தில் சென்னையில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மையாக அ.தி.மு.க ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்றும், எங்கெங்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என அறிந்து அ.தி.மு.க பணிகள் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை நகரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும், தியாகராயர் நகர் பகுதியில் மழை நீர் தேங்காது. கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டபோது கூட, தியாகராய நகரில் வெள்ளநீர் தேங்கவில்லை.
ஆனால் தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கியதற்கு காரணம், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் சென்னை தியாகராய நகர் பகுதியில் சரியாக வடிவமைக்காமல் மேற்கொள்ளப்பட்டதுதான். ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில், மழைநீர் வடிகால்கள் சேதப்படுத்தப்பட்டதால் தான் மழை நீர் தேங்கியது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!