Tamilnadu

’தம்பி.. பீரோவை உடைத்து சேதாரம் செய்திடாதே’ - திருடனுக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்!

கன்னியாகுமரியைச் சேர்ந்த காட்வின் என்ற வழக்கறிஞர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு 55 சவரன் நகையும், ரூ.22,000 ரொக்கமும் களவாடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, திருடனை கண்டுபிடிப்பதற்கான அவரது கைரேகையும், முகம் பதிவான சிசிடிவி பதிவுகள் இருந்தும் அந்த கொள்ளையன் சிக்கவில்லை. இதேபோல கடந்த 2019ல் அதே வீட்டில் தங்கியிருந்த ஜான்பால் என்பரின் மோதிரமும் திருடப்பட்டிருக்கிறது.

அப்போதும் திருடனுக்கு எதிரான ஆதாரங்கள் சிக்கியது. ஆனால் அப்போதைய காவல்துறையிடம் புகாரளித்தும் பயணில்லாமல் போய்விட்டதாம்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி சொந்த ஊருக்குச் செல்வதற்கு முன் திருடனுக்கு முக்கியமான செய்தியை எழுதி போஸ்டராகவே ஒட்டியிருக்கிறார் காட்வின். அதில், ‘தம்பி பீரோவை உடைத்து விடாதே. உள்ளே துணிகளை தவிர வேறேதும் இல்லை. சேதாரம் ஏதும் செய்து விடாதே’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த போட்டோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக உள்ள சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., வெளியூர் செல்லும் மக்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் தங்களது வீட்டின் முகவரியை கொடுத்துவிட்டுச் சென்றால் திருட்டுச் சம்பவம் நடைபெறாமல் இருக்க காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.