Tamilnadu

“சிறுவன் பசியால் உயிரிழக்கவில்லை..” : ‘பகீர்’ கிளப்பும் CCTV காட்சிகள் - விழுப்புரத்தில் அதிர்ச்சி!

விழுப்புரத்தில் சிறுவனை இரண்டு நபர்கள் தூக்கிச் சென்று தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார், கடந்த 20 வருடங்களாக சென்னை - விழுப்புரம் நெடுஞ்சாலை ஓரமாக தள்ளுவண்டியில் இஸ்திரி போட்டுவருகிறார். இவரது தள்ளுவண்டியின் மீது கடந்த 15-ஆம் தேதி, 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தச் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலிஸார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு உண்ணாமல், தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினியாக கிடந்ததால் அந்தச் சிறுவன் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலிஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவு ஒன்று வெளியானது.

அந்த வீடியோவில் சிறுவனை ஒரு நபர் தோளில் சுமந்து வருவதும், அவருடன் மற்றொருவர் வருவதும் பதிவாகி உள்ளது. அவர்கள் இருவரும் சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச்சென்றது உறுதியாகியுள்ளது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் இந்த சிறுவனை தனிமைப்படுத்தி உணவு கொடுக்காமல் வைத்திருந்து இறந்தபின்பு தள்ளுவண்டியில் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், சிறுவனின் புகைப்படத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநில போலிஸாருக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “பில்லி சூனியத்தை எடுக்குறேன்” : புகை போட்டு நகை திருடிய மந்திரவாதி - CCTV காட்சிகளை கொண்டு விசாரணை!