Tamilnadu

வீச்சரிவாள், வெடிக்குண்டுகளை பதுக்கி வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் - ஐவர் கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை , சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி (எ) கிச்சா (32) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீச்சரிவாள்கள் மறைத்து வைத்திருப்பதை கண்ட வீட்டின் உரிமையாளர் அது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி வீட்டு உரிமையாளரை மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (14.12.2021) காலை 10 மணியளவில் கிருஷ்ணமூர்த்தியும் அவர்களது நண்பர்களும் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்த போது, அங்கு 1 இளஞ்சிறுவர் உட்பட 5 நபர்கள் வீச்சரிவாள்கள், மற்றும் நாட்டுவெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களுடன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் 5 நபர்களையும் பிடித்து போலிஸார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள்

1.கிருஷ்ணமூர்த்தி (எ) கிச்சா, (32)

2.பார்த்திபன் (23),

3. ஜெகன், (24)

4.ராஜராஜன், (27)

மற்றொருவர் 17 வயதுடைய இளஞ்சிறார் என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 5 வீச்சரிவாள்கள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிமருந்து மற்றும் மூலப்பொருட்கள், 5 செல்போன்கள், 1 ஆட்டோ மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலிஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் முன்விரோதம் காரணமாக கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேற்படி வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணமூர்த்தி கடந்த 2021 - ஜுன் மாதத்தில் கண்ணகி நகர் பகுதியில் சந்தியா என்ற பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர் கண்ணகி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 1 கொலை வழக்கு, 5 கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகள் உட்பட 16 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுபோக, 4 முறை ஏற்கனவே குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் மீது 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 3 வழக்குகளும், ஜெகன் மீது 1 கொலை முயற்சி வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 4 நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது இளஞ்சிறார் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

Also Read: லிஃப்ட் கொடுப்பதுபோல மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன்... போலிஸில் சிக்கியது எப்படி?