கோப்புப்படம்

Tamilnadu

மக்களே கவனம்: ”ஊரடங்கில்லா தமிழ்நாட்டை உருவாக்க இதுதான் வழி” - அமைச்சர் மா.சு., சொல்லும் முக்கிய தகவல்!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் 110 அறிவிப்பிற்கிணங்க பல்வேறு சிறப்பு சிகிச்சை பிரிவுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்ற அரசு மருத்துவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நடந்து முடிந்த சட்டபேரவையில் முதல்வர் அறிவித்த 110 விதியின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோர் அறிவுத்திறன் மேம்பாடு மற்றும் தின பராமரிப்பு மையம், ஆதரவற்ற மனநோயர் அவசர சிகிச்சை மற்றும் மீள் வாழ்வு மையம், இளைஞர்களுக்கான இணையதள சார்பு நிலை மீள் வாழ்வு மையம், பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கு செவித்திறன் கண்டறிதல் ஆகிய 5 அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு வருகிறது.

பிரசவத்திற்குப் பிந்தைய காலங்களில் ஏற்படும் மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, உடல் பலவீனம், பசியின்மை ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இணையத்தில் முழுமையாக மூழ்கி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை வழிப்படுத்தவும், குழந்தைகளின் அலைபேசி பயன்பாட்டை குறைக்கவும் ஆலோசனை வழங்க தனி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளை இணைய அடிமை நோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். மேலும் பிரசவத்திற்கு பிந்தைய நாட்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை பரிசோதனை செய்வதற்கான சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இது அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிப்புலன் பிரச்சனைகளுக்கான சிறப்பு பரிசோதனை மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஐந்து திட்டங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது. மேலும் புதிதாக தொடங்கவுள்ள 11 மருத்துவமனைகளிலும் திறப்பு விழாவிற்கு பிறகு இது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அளிக்கும் அரசு சேவைகளை விட கூடுதலான சேவைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் உண்மை நிலை என்னவென்று தெரியாமல் அறிக்கையின் வாயிலாக தவறான கருத்துக்களை அதிமுக'வை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மக்கள் மத்தியில் தெரிவிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை. அனைத்து விமான நிலையங்களிலும் பல்வேறு பரிசோதனைகள் தெளிவாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமாகவும் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொள்வதன் மூலமாக தமிழ்நாட்டில் ஊரடங்கை தடுக்க முடியும். சென்னையில் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியில் 28 முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இடங்களை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது

தடுப்பூசிகளை பொறுத்தவரை முதல் தவணை 82 சதவிகிதம் பேரும், இரண்டாவது தவணை 51.35 % பெரும் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தமிழாட்டில் 76 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது.