Tamilnadu
"அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கை": மாரிதாஸ் கைது நடவடிக்கைக்குப் பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு!
போலியாக மின்னஞ்சலை உருவாக்கி ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயல்பட்ட மாரிதாஸை போலிஸார் கைது செய்த நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்றுள்ளது.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
செய்தி ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர்வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும், அவரது செயலால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் வினய் சரவாஹி கடந்த 10.7.2020-ம் தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை புலன் விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு போலிஸார், மாரிதாஸை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித் தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸின் செயல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அப்போதே கண்டனம் செய்திருந்தது.
சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்கிறோம். தாமதமானாலும் தற்போதைய இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்.தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசுவதுமான போக்கு ஆரோக்கியமானது அல்ல.
பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலக்குவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவர் ஒருவர் முன்னெடுத்தாலும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். சமூகவிரோத சக்திகளிடம் இருந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.
இவ்வாறு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!