Tamilnadu

நரிக்குறவர்களை பேருந்திலிருந்து இறக்கிய விவகாரம் : ஓட்டுனர், நடத்துனரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு தினமும் வள்ளியூர் பகுதியில் இருந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் குழுக்களாக வருவது வழக்கம். இவர்கள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தை சுற்றியும், பேருந்து நிலையத்திலும் ஊசி பாசி விற்பனை செய்வதோடு, தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம்.

அந்தவகையில், பேருந்தில் பயணிக்க மூன்று குழுக்களாக ஏறியுள்ளனர். அப்போது கூச்சல் அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வெளியே வந்த நிலையில், அவர்களை நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார். ஏற்கனவே மீனவ பெண் செலவமேரி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக பயணிகளிடம் முறையாக நடந்துக்கொள்ள வேண்டும், யாரிடமும் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என முதல்வரின் அறிவுறுத்தியிருந்தார். முதல்வரின் அறிவுறுத்தலின் படி நடந்துக்கொள்ளவேண்டும் மற்றும் பயணிகளிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் எனபோக்குவரத்து துறை அனைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிக்கையும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலத்தின் பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் திருவட்டார் கிளை பேருந்து எண் TN 74 N1802 தடம் எண் 165, 9.12.2011 அன்று மாலை சுமார் 11.30 மணியளவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டது.

இந்த பேருந்தில் ஓட்டுனர் நெல்சன் பணி எண் 201 மற்றும் நடத்துனர் A.ஜெயதாஸ் பணி எண்.11619 பணியில் உள்ளனர். இந்த பேருந்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வயதான ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஏறியுள்ளனர். பேருந்து வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த போது மேற்படி பயணிகள் மூவரையும் பேருந்தில் இருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இறக்கி விட்டதாக தெரிகிறது.

இந்நிகழ்வை அருகிலுள்ள பேருந்து நிலைய காப்பாளர்களிடம் தெருவிக்காமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த ஊடகவியாளர்கள் இதனை வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்த பின்னரே இந்நிகழ்வு நிர்வாகத்திற்கு தெரியவருகிறது.

எனவே பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 'எல்லோரும் சமம்'.. மீனவ மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கிய விவகாரம் - முதல்வர் கடும் கண்டனம்!