Tamilnadu

“மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை”: ஓட்டுநர், நடத்துநருக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பேருந்தில் வரும் சில மாணவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் ஆபத்தாகப் பயணிப்பது தொடர்பான வீடியோக்களும் இணையங்களில் பரவியது.

இந்நிலையில், அரசு பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பள்ளி - கல்லூரிகளுக்கு அருகே பேருந்துகளை நிறுத்திச் செல்ல வேண்டும்.

அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களை முழுமையாகப் பேருந்தில் ஏற்றிச்செல்ல வேண்டும். மேலும் பேருந்தில் போதுமான இடத்தை மாணவர்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வழங்க வேண்டும்.

அதிகமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தால், அருகில் இருக்கும் கிளைக்குத் தகவல் தெரிவித்துக் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 'எல்லோரும் சமம்'.. மீனவ மூதாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கிய விவகாரம் - முதல்வர் கடும் கண்டனம்!