Tamilnadu

“இது ஸ்டாலின் ஸ்டைல்”: தமிழர்களின் இதயங்களில் எல்லாம் வாழ்கிறார் முதல்வர்.. மலையாள தொலைக்காட்சி புகழாரம்!

மலையாள மொழியில் புகழ்பெற்ற செய்தித் தொலைக்காட்சியான ‘மாத்ருபூமி நியூஸ்’, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறு மாதங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள நிலையில், இந்த ஆறு மாதங்களில், முதல்வர் அவர்கள்இந்திய அரசியலில் நிகழ்த்தியுள்ள முன்னுதாரணம் இல்லாத பல வரலாற்றுச் சாதனைகளைத் தொகுத்து சிறப்புக் காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

‘இது ஸ்டாலின் ஸ்டைல்’ எனும் தலைப்பில் அமைந்த அந்தக் காணொலியில் ‘மாத்ருபூமி நியூஸ்’தொலைக்காட்சி, “தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் ஒரு தலைவராக - தமிழர்களின் இதயங்களில் எல்லாம் வாழ்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.

‘இது ஸ்டாலின் ஸ்டைல்’என்பது நிகழ்ச்சித் தலைப்பு. “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்..” என்று உறுதிமொழி எடுக்கிற காட்சியோடு நிகழ்ச்சி தொடங்குகிறது. “மக்களின் ஏகோபித்த நம்பிக்கையோடு மே 7, 2021 அன்று பொறுப்பேற்ற தி.மு.க. அரசு கடந்த ஆறு மாதங்களில் என்ன செய்தது என்கிற பரிசோதனைதான் இந்த நிகழ்ச்சி” என்கிற முன்னுரை அடுத்து வருகிறது.

எல்லாக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம் என்பவைதான்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாளில் கையழுத்திட்ட ஆணைகள். தொடர்ந்து இந்த ஆணைகளால் பயனடைந்தவர்களின் நேர்காணல் ஒளி பரப்பாகிறது.

எளிய மக்களுக்கு தோள் கொடுக்கும் அரசு!

அடுத்து, “திராவிட அரசியல், சாதிகளுக்கு எதிரானது” என்கிற சித்தாந்தம் விளக்கப்படுகிறது.

மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் அரசு வழங்கும் அன்னதானம் மறுக்கப்பட்ட நரிக்குறவப் பெண் அஸ்வினியின் குரல் அடுத்துக் கேட்கிறது. இந்தக் குரல் முதலமைச்சருக்கும் கேட்டது என்று சொல்லும் அறிவிப்பாளர், தொடர்ந்து நிகழ்ந்தவைகள் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராதவைகள் என்கிறார்.

உணவு மறுக்கப்பட்ட அஸ்வினியுடன் அமர்ந்து உணவு உண்டார், அற நிலையத்துறை அமைச்சர். “அஸ்வினிக்கு பந்தியில் இடம் மறுத்தவர்கள் இலையிட்டு உணவு பரிமாறிய காட்சியை நாடு கண்டது. கதை இந்த இடத்தில் முடியவில்லை.

அஸ்வினியின் வீட்டிற்கும் சென்றார் முதலமைச்சர். எளிய மக்களுக்குத் தோள் கொடுக்கும் அரசு இது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.

”அடுத்து ‘ஜெய்பீம்’ படத்தின் சில காட்சிகள் இணைகின்றன. சாதிக்கட்டமைப்பால் ஆதிக்குடிகள் அல்லலுறும் காட்சிகள்இடம் பெறுகின்றன. தொடர்ந்து - தீபாவளி நாளை முதலமைச்சர் அவர்கள் பழங்குடி மக்களோடு கொண்டாடிய காட்சிகள் இடம்பெறுகின்றன.

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் இருளர், நரிக்குறவர் சமூகங்களுக்கு பட்டா நிலங்கள் வழங்கப்பட்டதையும், அந்த மக்களுக்கு அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் வழங்கப்படுவதற்கான கணக்கெடுப்புகளும் விவரிக்கப்படுகின்றன.

கோயில் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

அடுத்த காட்சியில் ஆலயம் வருகிறது .சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயம். அங்கு ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனா என்ற இளம்பெண் வருகிறார். அவரது மதுரக் குரலில் தேவாரம் கேட்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கராக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள வரலாறு சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. பல கோயில் நிலங்களிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதைக் குறித்த விளக்கம் இடம் பெறுகிறது.

“தேர்தலுக்கு முன்பு கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சங் பரிவாரங்கள் சத்தமிட்டு வந்தனர், இப்போது அந்தக்குரல் தேய்ந்து இல்லாமலே ஆகிவிட்டது” என்கிறார் அறிவிப்பாளர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறுவதை தமிழக அரசு பார்த்துக் கொண்டிராது என்பதை நிரூபிக்கும் காட்சிகள் அடுத்து வருகின்றன. தக்காளி விலை கிலோ ரூ.120க்கு விற்றபோது, அரசு நியாய விலைக் கடைகளில் ரூ.29க்கு விற்றது. தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ரூ.60ஆகக் குறைந்தது. காய்கறிகளை நியாயவிலைக் கடைகளில் விற்கும் திட்டமும் அரசுக்கு இருக்கிறது.

அடுத்து அரசியல் அரங்கிற்கு காட்சி மாறுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்தபோதும், ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் இறந்தபோதும் அவர்கள் வீட்டிற்குச் சென்று முதல்வர் அவர்கள் துக்கம் விசாரித்த காட்சிகள் அடுத்து வருகின்றன.

“எதிர்க்கட்சியினரிடம் நாகரீகமாக நடந்து கொள்ளும் அதேவேளையில், அவர்களது ஊழலையும் குற்றச் செயல்களையும் அவர் சகித்துக்கொள்வதில்லை. பழனிச்சாமிக்கு தொடர்பு உண்டு என்று சந்தேகப்படும் கொடநாடு கொலை வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்படுகிறது. எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதலியோர் மீதான ஊழல் விசாரணை இறுகுகிறது. இந்த முன்னாள் அமைச்சர்கள் ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள்” என்கிறார், அறிவிப்பாளர்.

அடுத்து ஆதரவற்ற எளிய மனிதனைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் அவர்கள், தமது இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து வாழ்த்துகிறார். திருடர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்கிறார். அந்தக் குடும்பத்திற்கு முதல்வர் அவர்கள் ஒரு கோடி ரூபாய் உதவிப்பணம் வழங்குகிறார்.

இளம்பெண்களுக்கு முதல்வரின் வேண்டுகோள்!

அடுத்து, முதல்வர் இளம் பெண்களிடம் தொலைக்காட்சி வாயிலாக முன்வைக்கும் வேண்டுகோள் வருகிறது. கோவையிலும் கரூரிலும் பாலியல் அத்துமீறலால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட இரு பள்ளி மாணவியரை முன்வைத்து எல்லா இளம்பெண்களுடனும் பேசுகிறார் முதல்வர். “இது ஒரு தந்தையின் குரல். ஒரு சகோதரனின் குரல். வாழந்து காட்டுவதன்மூலம் போராடுங்கள், இந்த அரசு கயவர்களைத் தண்டிக்காமல் விடாது,” என்கிறார் முதல்வர்.

அடுத்து ஒன்றிய- மாநில அரசுகளின் உறவு பேசப்படுகிறது. இயன்றவரை ஒன்றிய அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அதேநேரத்தில் தி.மு.க., குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் நீட் தேர்வுக்கும் எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியதும் சொல்லப்படுகிறது.

முல்லை பெரியாறு அணை சர்ச்சையில் கேரள அரசுடன் மோதல் போக்கைத் தவிர்க்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அதேவேளையில் அனுமதிக்கப்பட்ட 142 அடி உயரத்திற்கு தண்ணீரை, நிறுத்த ஆவன செய்கிறார். தி.மு.க அரசின் இந்த ஆரம்பம் இனியும் தொடரும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு ஒரு தகுதி வாய்ந்த அரசு கிடைத்திருக்கிறது.

Also Read: “ஒவ்வொரு அடியிலும் அதிரடி” : முன்மாதிரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - முன்னணி மலையாள தொலைக்காட்சி புகழாரம்!