Tamilnadu

வாடகைக்கு காரை வாங்கி லட்சக்கணக்கில் ஏப்பம் விட்ட மோசடி பேர்வழி.. தலைமறைவாக இருந்தவர் சிக்கியது எப்படி?

சென்னை , போரூர், காமராஜர்புரம், அம்பேத்கர் தெரு, எண்.55 என்ற முகவரியில் வசிக்கும் அப்பாவு (62) என்பவர் சென்னை , நுங்கம்பாக்கம், உத்தமர்காந்தி சாலையில் இயங்கி வரும் Viviliya Transport & Logistics என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அருண் (எ) அருண்குமார் என்பவரிடம் கடந்த 12.09.2021 அன்று ரூ.20 ஆயிரத்திற்கு காரை மாத வாடகைக்கு விட்டதாகவும், ஒரு மாதம் வாடகை செலுத்தியவர் பின்னர் வாடகை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், அப்பாவு காரை திரும்ப கேட்பதற்கு சென்ற போது, அருண் தலைமறைவாகியது தெரியவந்துள்ளது.

இது குறித்து அப்பாவு நுங்கம்பாக்கம் F-3 காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டதில் அருண் (எ) அருண்குமார், அப்பாவு உட்பட 21 நபர்களிடம் கார்களை வாடகைக்கு பெற்று ஒரு மாதம் மட்டும் வாடகை செலுத்தியுள்ளார். பின்னர் வாடகைக்கு பெற்ற கார்களை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானது தெரியவந்தது. அதன்பேரில் தலைமறைவான அருண்குமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாகியிருந்த அருண் (எ) அருண்குமார் V-7 நொளம்பூர் காவல் நிலைய எல்லையில் கார்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்த போது இதே போன்று கார்களை வாடகைக்கு பெற்று, அடமானம் வைத்து பணம் வாங்கி மோசடி செய்த குற்றத்திற்காக கடந்த 25.10.2021 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதன் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் சிறையிலிருந்த அருண் (எ) அருண்குமாரை என்பவரை சட்டப்படி கைது செய்து, மேலும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அருண், புரோக்கர்கள் மூலம் கார்களின் ஜெராக்ஸ் ஆர்.சி புத்தகங்களை வைத்து ஒரு காருக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அடமானம் வைத்துள்ளது தெரியவந்தது. அருண் அளித்த தகவலின் பேரிலும், வாடகைக்கு கொடுத்த 2 கார்களில் பொருத்தப்பட்டுள்ள GPS கருவிகளை கொண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில், கார் தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தூத்துக்குடி மாவட்டத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 2 கார்களை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

மேலும் கார் புரோக்கர்கள் தனிப்படை போலீசாரிடம் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 7 கார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 2 கார்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 1 கார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 கார், சிவகங்கை மாவட்டத்தில் 1 கார் என மொத்தம் 12 கார்களை அடமானம் பெற்ற நபர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். மற்ற அடமான கார்களை மீட்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் அருண் (எ) அருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: ’S EX’ என்ற நம்பர் ப்ளேட்டால் மன உளைச்சலுக்கு ஆளான டெல்லி பெண்: நடந்தது என்ன?