Tamilnadu

கூவம் ஆற்றில் விழுந்த போதை ஆசாமி; விடிய விடிய தேடிய தீயணைப்புத்துறை; விசாரணையில் வெளிவந்த பரபரப்பு தகவல்!

சென்னை அண்ணாசாலை காந்தி நகர் முத்துசாமி பாலத்தின் மீது மதுபோதையில் அமர்ந்திருந்த 36 வயதான வில்சன் என்பவர் கூவம் ஆற்றில் தவறி விழுந்ததால் திருவல்லிக்கேணி போலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் கூவம் ஆற்றில் விழுந்த வில்சனை தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவர் தனது மனைவி பிருந்தா என்பவருடன் காயித்தமிலத் மேம்பாலம் அருகே உள்ள காந்தி நகர் முத்துசாமி பாலத்தின் மீது பிளாட்பாரத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இருவரும் அதிக மது போதையில் இருந்த போது பேச்சுவார்த்தையில் சண்டையிட வாக்குவாதத்தில் மேம்பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார் வில்சன்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருவல்லிக்கேணி போலிஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்புதுறை நிலைய அலுவலர் ஸ்டீபன்ராஜ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் உடனடியாக கூவம் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இது போன்று அடிக்கடி குடிபோதையில் வில்சன் தவறி விழுந்து மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம் எனவும், இது மூன்றாவது முறை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

காயிதேமில்லத் மேம்பாலம் முதல் நேப்பியர் பாலம் முகத்துவாரம் வரை தீயணைப்புத் துறையினர் சென்று தேடிய போதும் வில்சன் கிடைக்காததால் காலை விடிந்த பின்பு மீண்டும் தேட உள்ளதாக தீயணைப்பு துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருவல்லிக்கேணி போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “கப்பல்ல கொண்டு வர ரொம்ப செலவாகும்.. ஆப்பிரிக்க இளைஞரின் வலையில் சிக்கிய ராணுவவீரர்” : தேனி போலிஸ் அதிரடி