Tamilnadu
“சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலினின் திராவிட ஆட்சிக்கு அரணாக இருப்போம்” : கி.வீரமணி உறுதி!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. 89வது அகவை காணும் ஆசிரியர் கி.வீரமணி, “சமூகநீதிக்கான இந்த ஆட்சிக்குக் காவல் அரணாக இருப்போம்” எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், “பிறந்த ஓராண்டுக்குள்ளேயே என் தாயாரை இழந்த நான், சிற்றன்னையால் வளர்த்தெடுக்கப்பட்டேன்.
எனது தொடக்கப் பள்ளிக் காலத்திலேயே எனக்கு ஈரோட்டுப் பகுத்தறிவுப் பால் ஊட்டி வளர்த்தவர் எனது ஆசிரியர் ஆ.திராவிடமணியாவார். பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, பத்து வயதிலேயே மேடைப் பேச்சாளனாக அறிமுகமானேன்.
என்னைத் தாலாட்டி வளர்த்த தொட்டில் சுயமரியாதை இயக்கம்.
எனது வாழ்க்கைப் பயணத்தில் ஏழுமுறை என் உயிருக்குக் குறி வைக்கப்பட்டது - 54 முறை சிறைவாசம் என்னுடையது.
பெரியார் மறைந்த நிலையில், எடுத்துக்கொண்ட உறுதிமொழி அடிப்படையில் எங்கள் பணிகள் தொடர்கின்றன. எனது கொள்கை உறவுகளும், குருதி உறவுகளும் எனக்குப் பெருந்துணையாக உள்ளனர்.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையாகும். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட ஆட்சி அதனையும் சாதித்தது மனநிறைவாகும்.
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக்கி அரசுப் பணியாளர்களை உறுதி ஏற்கச் செய்து சாதனை சரித்திரம் படைத்துவிட்டார் முதலமைச்சர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
1. சமூகநீதிக்கான இந்த ஆட்சிக்குக் காவல் அரணாக இருப்போம்.
2. ஜாதி ஒழிப்பை அரசியல் சட்ட ரீதியாகவே செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவோம்.
கடந்த 26 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜாதி ஒழிப்புக்காக ஒன்றிய, மாநில அரசுகள் செய்யவேண்டியது குறித்து அளித்த தீர்ப்பை வரவேற்று, ஜாதி ஒழிக்கும் பணியினைத் தீவிரப்படுத்துவோம்.
ஒன்றிய மாநில அரசுகள் அவற்றைச் செயல்படுத்திட வலியுறுத்துவோம்!
3. ‘நீட்’ தேர்வை ஒழிக்க பிரச்சாரம், களப் பணிகளில் ஈடுபடுவோம்.
4. திருச்சி சிறுகனூரில் ‘பெரியார் உலகம்‘ அமைக்கும் பணியில் ஈடுபடுவோம்.
5. தந்தை பெரியாரின் பணியில் ஈடுபடும் எங்களுக்கு முதுமை இல்லை - மாறாக முதிர்ச்சிதான். எங்கள் பணி தங்குத் தடையின்றித் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது” : தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி பேட்டி!
-
காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறைகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு... என்னென்ன? விவரம்!
-
ரூ.210.17 கோடியில் அரசுப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
150 க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.. இந்திய நாட்டிய விழா தொடக்கம்- எங்கு? விவரம்!