Tamilnadu

”நாங்க விஜிலன்ஸ்ல இருந்து வந்துருக்கோம்” - சாலையில் போனவரை மடக்கி மோதிரத்தை பறித்த மோசடி பேர்வழி!

மதுரை பழங்காநத்தம் கோவலன் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தொழிலதிபராக உள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் மதுரை மேலவெளி வீதி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நண்பர்கள் சிலரை சந்திக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் தங்கும் விடுதிக்கு சொகுசு காரில் வந்த இரண்டு நபர்கள் வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டுள்ளனர். மேலும் அவரிடம் பணம் எதுவும் இல்லாததால் கையில் அணிந்திருந்த அரை சவரன் தங்க மோதிரத்தை பறிமுதல் செய்வதாக கூறி வாங்கி சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த வெங்கடேசன் மதுரை திடீர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி வெங்கடேசனை ஏமாற்ற முயன்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த அஜய் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவிசங்கர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: வரதட்சணைக்காக 6 இளம் பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!