Tamilnadu

“தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இதுவரை இல்லை...” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சி.வி.கணேசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”73 நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் நேர்காணலில் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் வெளிவரும் கொரோனா பரிசோதனை முடிவுகளில் டெல்டா வைரஸ்தான் தற்போது வரை உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் இதுவரை தமிழகத்தில் உறுதி செய்யப்படவில்லை. ஒமிக்ரான் வைரஸ் குறித்து விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளது. தமிழக அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அம்மா மினி கிளினிக்" திட்டம் பெயர் வைப்பதற்காகவே தொடங்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லை. அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட 1,820 பேருக்கு மாற்று ஏற்பாடு செய்து வேறு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் உருமாற்றமடைந்த வைரஸ்களை கண்டவறிவதற்கு வசதி உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஒமிக்ரான் பாதிப்பு மிகமோசமானதா? தொற்று விரைவில் பரவுமா?” : WHO வெளியிட்ட 5 முக்கிய தகவல்கள்!