Tamilnadu

காய்ச்சல் மாத்திரை கேட்டவருக்கு ஊசி போட்டதால் நெஞ்சுவலி.. மருந்துக்கடைக்காரர் கைது : கரூரில் விபரீதம்!

கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள மாவத்தூரைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 31). லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் சிவசக்தி. கரூர் அருகே உள்ள தென்னிலை மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 51). இவர் ஐ.டி.ஐ-யில் மெக்கானிக்கல் படித்துவிட்டு, தென்னிலையில் மருந்துக்கடை ஒன்றை நடத்திவருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தென்னிலை பகுதிக்கு வந்த சிவசக்திக்கு உடல்நலமில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் அவர் ராமலிங்கத்தின் மருந்துக் கடைக்கு சென்று காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புக்கு ஏற்ற மாத்திரை தரும்படி கேட்டுள்ளார். ஆனால், ராமலிங்கம் மாத்திரை மட்டும் சாப்பிட்டால் சரியாகாது எனக் கூறி, சிவசக்திக்கு ஊசி போட்டு அனுப்பி வைத்துள்ளார்.

ஊசி போட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே சிவசக்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சிவசக்தியின் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ராமலிங்கம் தனக்கு ஊசி போட்டுவிட்டதால்தான் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சிவசக்தி தென்னிலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ராமலிங்கத்தை கைது செய்து காவலில் வைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?