Tamilnadu
“ஒற்றை செங்கல் புரட்சியின் வெற்றி நாயகன் உதயநிதி ஸ்டாலின்” : பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!
“மக்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட வேண்டுமோ அவர்களை அங்கே இட்டுச் செல்வதுதான். தலைவனின் அடையாளம்” என்கிறார் அறிஞர் ரோஸலின் கார்ட்டர். இந்த இலக்கணத்தோடு அப்படியே பொருந்துகிறார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
நூற்றாண்டு கண்ட நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ்நாட்டை செம்மாந்த சீரோடு ஆட்சி செய்து வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் எனும் முப்பெரும் தலைமை பண்புமிக்கவர்களால் தமிழகத்தின் ஆட்சி மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அசைக்கமுடியாத இரும்புக் கோட்டையும் கட்டி காப்பாற்றப்பட்டு வருகிறது.
இந்த இயக்கம் தமிழ்கூறும் நல்லுலகம் உள்ளவரை தழைத்தோங்கி வளரும், உயரும், தமிழ்மக்களின் நலனுக்காக உழைக்கும் எனும் நம்பிக்கை ஒளிக்கீற்றை கையில் ஏந்தி உருவாகி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கிழக்கின் வெளிச்சமாக, தமிழர்களின் நம்பிக் கை நட்சத்திரமான உதயநிதி ஸ்டாலினின் உதயத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு அளப்பறியது.
முத்தமிழறிஞரின் பேரன், முதலமைச்சரின் மகன் என்ற அடையாளங்கள் மட்டும் உதயநிதியை உயர்த்தி விட்டதா?.
'ஒரு தலைவனுக்குரிய முக்கிய அடையாளமே அவனது அணுகுமுறைதான்' என்கிறார் தியோடர் ஹெஸ்பர்க். அந்த மெச்சத்தக்க அணுகுமுறையை மக்கள் பணியில் செயல்படுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். சென்னை லயோலா கல்லூரியில் காட்சித் தொடர்பில் படிப்பை முடித்தவர், உயர்கல்வியை வெளிநாட்டில் முடித்தவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கிறார். சில படங்களை தயாரித்து, சில படங்களை விநியோகித்து பின் நடிகராக உருவெடுக்கிறார்.
பட்டிதொட்டி எங்கும் உதயநிதி ஸ்டாலின் பெயரும், முகமும் நன்கு அறிமுகமாகின்றன. கடந்த 10 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் மக்கள் களத்திற்கு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார் உதயநிதி. அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கட்சி பொறுப்பு எதுவும் இல்லாமல் திரைப்பட நடிகராக பிரசாரம் செய்த உதயநிதிக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.
உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர். அவருடைய பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசச் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடினார்கள். தேர்தல் முடிவில் 37 மக்களவை தொகுதிகளையும் 13 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். இதனைத் தொடர்ந்து உதயநிதிக்கு கட்சியில் பதவி வழங்கவேண்டும் என்ற குரல் தொண்டர்களிடையே எழுந்தது.
இந்த சூழலில்தான் இளைஞரணியை பலப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்கிறார். உதயநிதி ஸ்டாலினின் தகுதியையும், திறமையையும் வைத்தே, கட்சியின் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை வழங்குகிறார். ஜூலை 4, 2019 அன்று உதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞரணித்தலைவராகிறார். இளைஞரணி எழுச்சி பெறுகிறது.
“தலைமைத்துவம் என்பது கிரீடம் சூட்டிக்கொள்வது மட்டுமல்ல; தழும்புகளைத் தாங்குவதும் தான்” என்பதற்கேற்ப மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்கிறார். சிறுபான்மை மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் போராட்டத்தினை நடத்தி தொண்டர்களோடு தொண்டனாக கைதாகிறார்.
தமிழகமெங்கும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த பானவேடு தோட்டம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், இந்தக் கூட்டம் பேசிவிட்டுச் செல்லக்கூடிய கூட்டம் அல்ல. உங்கள் குறைகளை என்னிடம் சொல்வீர்கள். அதைக் குறிப்பு எடுத்துக்கொண்டு தலைவரிடம் சொல்வேன். தமிழகத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று உறுதி கூறுகிறார் உதயநிதி.
இதையெடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தங்களின் குறைகளை சொல்லத் தொடங்கினார்கள். இதில் முதலில் உதயநிதியிடம் பேசிய பெண் மைக்கை கையில் வாங்கி என் பெயர் சசிகலா என்று சொன்னவுடன் கூட்டத்தில் பலத்த சிரிப்பலை சத்தம் எழுந்தது. அப்போது குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், ``சசிகலாவுக்கே குறையா" என்று சிரித்தபடி கேட்டார். இந்த நாவாண்மை எங்கிருந்து வந்தது?.
தமிழர்களை தன் சொல்லாலும், செயலாலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற திராவிடப் பெருந்தலைவர்களின் நாவாண்மை தான் உதயநிதியின் நாவாண்மை என்பது நிரூபணம் ஆனது அன்று.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டுகள் சுரண்டிக் கொண்டிருந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிரான போராகவே நடந்தது. அன்றைய எதிர்கட்சித் தலைவரும், இன்றைய முதலமைச்சரும், கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர உடன்பிறப்புகள் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த தேர்தல் காலம் அது.
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக கட்சியால் நிறுத்தப்பட்டார். ஆனால், அவர் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். அவர் செய்தது பிரச்சாரமல்ல... புரட்சி. ஆம், ஒற்றை செங்கல் புரட்சி.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தது.
இந்த சூழலில்தான், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டினார்.
உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தனது பிரசாரக் கூட்டங்களில் எய்ம்ஸ் தொடர்பான செங்கல் பிரசாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். அடுத்த நாள் பிரசாரக் கூட்டத்தில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட இன்னொரு செங்கலை எடுத்து வந்த பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
பட்டி தொட்டியெங்கும், இந்த ஒற்றை செங்கல் புரட்சி மக்களின் மனங்களை வென்றது என்றால் அது மிகையில்லை.
தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று, முத்துவேல்... கருணாநிதி...ஸ்டாலின் ஆகிய நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிபிரமாணம் எடுத்துக் கொண்ட அந்த அற்புத தருணம் நிகழ்ந்தது.
திராவிட முன்னேற்ற கழகத்தை குடும்ப கட்சி என்கிறார்கள். ஆம் குடும்பம் குடும்பமாக கட்சிக்காரர்கள் பண்புடனும், அன்புடனும் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நிதர்சனமாக தனது கன்னி பேச்சின்மூலம் நிரூபித்தார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 18.08.2021 அன்று, ``தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மூவரையும் வணங்கி என்னுடைய கன்னிப்பேச்சை இந்த அவையில் பதிவு செய்கிறேன்” என்று பேசத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகனைத் தனது பேச்சில் சுட்டிக்காட்டும்போது `பேராசிரியர் தாத்தா’ என்றே அன்பழகனைக் குறிப்பிட்டார் உதயநிதி. நீதிக்கட்சியில் தொடங்கி தி.மு.க வரை வரிசையாக உதயநிதி பட்டியலிட தி.மு.க-வினர் மேசையைத் தட்டி அந்தப் பேச்சை உற்சாகப்படுத்தினார்கள்.
தனது நெருங்கிய நண்பர் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நன்றி சொல்லும்போது ``முத்தமிழறிஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்குப் பிறகு இன்று என்னுடைய நண்பனாக தோளோடு தோள் நிற்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாச பிணைப்பை சபையில் உணர்த்தினார்.
விவசாய பெருங்குடிகளை பாதிக்கும் வேளாண் விவசாய சட்டம், பெட்ரொல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஉயர்வு, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றபோது தமிழ்நாட்டிலும் தி.மு.கழகம் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போதும் போராடி இருக்கிறோம், இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடுகிறோம் எங்கள் போராட்டம் மக்களுக்கானது என்று பேசினார். அதோடு மட்டுமல்லாமல், ஒன்றிய பாஜக பாசிச ஆட்சியை எதிர்த்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும் சூளுரைத்தார்.
தலைமைப் பண்பு என்பது வெறுமனே நிகழ்ச்சிநிரலுக்கு எதிர்வினை புரிவது அல்ல, சிக்கல்களை அடையாளம் காண்பதும், மாற்றங்களைக் கையாளுவதைக் காட்டிலும் நிலையான மேம்பாட்டை உருவாக்கும் மாற்றத்தைத் துவக்குவதும் ஆகும் என்பதை அந்த போராட்டத்தில் பேசியதன் மூலம் தான் அநீதிகளை என்றும் எதிர்க்கும் மக்கள் தொண்டன் என்பதை உதயநிதி ஸ்டாலின் நிரூபித்தார்.
தி.மு.க கழகத்தின் தொண்டன், இளைஞரணிச் செயலாளர், முரசொலி அறக்கட்டளைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், தி ரைசிங் சன் ஆங்கில இதழின் வெளியீட்டாளர் என ஓங்கி உயர்ந்து கழகத்தின் காவல் அரணாக காட்சியளிக்கும் அவர், மக்கள் நலனை என்றும் இதயத்தில் சுமந்திருப்பவர் என்பதை அவரது மக்கள் நலப்பணிகள் உலகிற்கு உணர்த்துகின்றன.
கொரோனா பெருந்தொற்றுக் காலம் மட்டுமல்லாது, பெருமழை வெள்ளக்காலத்திலும் மக்களோடு மக்களாக நின்று நிவாரணப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனக்கு வாக்களித்த தொகுதி மக்களை தினந்தோறும் சந்தித்து, குறைகேட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் மக்கள் பணியை செவ்வனே செய்து வரும் அவரது பாகுபாடற்ற பணிக்கு இதோ ஒரு உதாரணம்.
அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ள தெரு வெள்ள நீரால் சூழப்படுகிறது. அதை அந்த கட்சிக்காரர்களே கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த அலுவலகத்திற்கு முன்பாக சென்று ஒரு சில மணிநேரத்திலேயே...வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றி தனது கடமையை செய்து முடித்தார்.
வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்நேரமும் பணியாற்றும் சூழலில், உதயநிதி ஸ்டாலினும் நிவாரண பணிகளில் பம்பரமாக சுழன்றதை ஊடகங்கள் படம்பிடித்துக் காட்டின.
இந்த நிலையில் நவம்பர் 27 (இன்று) தன்னுடைய பிறந்தநாளில் ஆடம்பரங்களைத் தவிர்த்து மக்களுக்குப் பயனுள்ள வகையில் நல உதவிகள் வழங்கிடுமாறு தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக சொல்லியுள்ளார். மீட்பு நடவடிக்கைகளிலும், வெள்ள பாதிப்புக்களை சரிசெய்வதிலும், தொடர்ந்து களத்தில் இறங்கி பணியாற்றுவதிலும் கழகத் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என்று அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.
.'ஒரு சிறந்த தலைவனின் மிக முக்கியமான குணமே நம்பிக்கையை உயிரோடு வைத்திருப்பது தான்' என்கிறார் எழுத்தாளர் ஜான் கார்டனர். மக்கள் தமிழ்நாட்டு அரசு மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பது இந்த இயக்கம் என்றும் நம்மை கைவிடாது என்பதுதான். அந்த நம்பிக்கைதான் உதயநிதி ஸ்டாலின் சொல்லும் வார்த்தைகள்.
''மக்கள் பணியே...எனக்கான பிறந்தநாள் பரிசு!''- இதுதான் திராவிட இனத்தின் அடிப்படையான அறத்தின் குரல்.
வாழ்க இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின்! வெல்க தி.மு.க!!
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!