Tamilnadu

“அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படாது” : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சு!

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு ‘கனெக்ட் 2021’ என்னும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி 2 நாட்கள் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற்றது.

ஒரு நிலையான ஆழமான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதை மையமாகக் கொண்டு நடந்த இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 2வது நாளான இன்று இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தொழில் முனைவோர்கள் தங்கள் கருத்தைப் பகிர்ந்துள்ளனர். தமிழகத்தில் தொழில் துறை வளர வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இளைஞர்களுக்கு படிக்கும்போதே பயிற்சி கொடுக்க வேண்டும். வரும் காலத்தில் அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட எல்லா பல்கலைக்கழகங்களிலும் படிக்கும்போதே மாணவர்களுக்கு பயிற்சி திறனை வளர்ப்பதற்காக லேப் அமைக்கும் பணி விரைவில் இருக்கும்.

படிப்பு என்பது ஏட்டுக் கல்வியாக இல்லாமல் வேலைவாய்ப்பையும், தொழிற்சாலையையும் அவர்களே உருவாக்குகின்ற வாய்ப்பாக இருக்கவேண்டும். வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துவங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படாது. தற்போது இருக்கின்ற நிலையே தொடரும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை அடைய தகவல் தொழில்நுட்பத்துறை எவ்வளவு பங்களிக்கின்றது என்பதை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த சிஐஐ - கனெக்ட் நிகழ்வும் அதன் ஒரு பகுதியாக இருக்கும்.

குறிப்பாக, எமர்ஜென்சி டெக்னாலஜியின் ஒரு பகுதியாக இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துகளை பெற்றுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும்” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு!