Tamilnadu

“உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும்” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிள்ளையாக இருப்பதாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியுள்ளார்.

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரம்பூர் தொகுதியில் 2045 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர் ஏற்பாட்டில் 2045 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட எருக்கஞ்சேரி டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு 13 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பொற்கொழி மற்றும் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், 2045 பேருக்கு மின்விசிறி, கிரைண்டர், கேஸ் அடுப்பு, இட்லி குக்கர், அரிசி மளிகை பொருட்கள் சீலிங் ஃபேன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மழை வந்துவிட்டால் கோட்டையில் உட்கார்ந்து ஆர்டர் போடும் முதலமைச்சர் இல்லை. மக்களோடு மக்களாய் களத்தில் நிற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அத்தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையாகவே திகழ்ந்து வருகிறார். ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அவரவர் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே வலம் வருகிறார்.

நடந்து முடிந்த தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலினும் அயராது உழைத்தார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மக்கள் சொந்தம் கொண்டாடினால் மட்டும் போதாது உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும்.

தமிழக முதல்வர் இந்தியாவிலேயே முன்னுதாரணமாக திகழும் முதல்வராக இருந்து வருகிறார். குறிப்பாக காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் மாறி தற்போது தமிழக முதல்வர் காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை சரி பார்த்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.

Also Read: நள்ளிரவில் ஓய்வில்லாமல் மழை பாதித்த பகுதிகளில் கனிமொழி MP - அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு: குவியும் பாராட்டு!