Tamilnadu

மோசடி புகாரில் போலிஸிடம் சிக்காமலிருக்க பட்டினி; தடுப்பூசி ஆவணத்தால் சிக்கிய பலே கில்லாடி.. நடந்தது என்ன?

சென்னை கொடுங்கையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரேமா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா மற்றும் ஈஸ்வரி என்ற இரண்டு பேர் சேர்ந்து பலரிடம் சீட்டு நடத்தி 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற் கட்டமாக ஈஸ்வரி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா என்பவரை கொடுங்கையூர் பகுதியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி இருந்தார்.

சசிகலா கடந்த இரண்டு வருடங்களாக உறவினர்களையோ நண்பர்களையோ தொடர்பு கொள்ளவில்லை. அவருக்கு செல்போன் மற்றும் லேண்ட்லைன் போன்ற தொடர்பு எண் எதுவும் இல்லாத காரணத்தினால், அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்தது .

இதனையடுத்து அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ய ஆரம்பித்தனர். அந்த அடிப்படையில் சுகாதாரத்துறை உதவியுடன் போலீசார் தேடியதில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சசிகலா கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டது தெரியவந்தது.

Also Read: பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது - சைக்கிளில் ரோந்து சென்று போலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

உடனடியாக தனிப்படை ஒன்று காஞ்சிபுரத்தில் ஒரு வாரம் தங்கி இருந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சசிகலாவின் புகைப்படத்தை காட்டி தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கேபிள் ஆப்ரேட்டர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சசிகலாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்படும்போது சசிகலா மிகவும் மெலிந்த தேகத்துடன் ஆள் அடையாளம் தெரியாததுபோல் இருந்துள்ளார். இரண்டு வருடத்திற்கு முன்பு கிடைத்த பழைய போட்டோ வைத்தே போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் தன்னை கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிடாமல் உடல் மெலிந்து ஆளே மாறியதாக தெரியவந்துள்ளது.

ஆனால் போலீசாரிடம் தன் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் குடும்ப கஷ்டம் காரணமாக தான் ஒருவரை அழைத்து வருவதால் மெலிந்து போனதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது கொடுக்கப்பட்ட ஆதார் ஆவணத்தின் மூலம் பெண் குற்றவாளி ஒருவரை சாதுரியமாக கைது செய்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணாவை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Also Read: ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... மடக்கிப் பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?