Tamilnadu

இனி 6 நாட்கள் நேரடி வகுப்பு.. கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தபோது பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தன. அதேபோல் தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது.

இப்படிக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாகப் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனிலேயே நடந்து வந்தன. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்டன.

பின்னர் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடக்கும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து இனி வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்லூரிகளில் வாரத்தில் 6 நாட்களும் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடைபெறும். 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடந்துவந்த நிலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறை அல்லாமல் இனி நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும். மாணவர்களுக்குப் பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும். ஜன. 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும், அதற்கு முன்பாக மாதிரி தேர்வுகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: முதலமைச்சரின் படம் இல்லாமல் நடைபெற்ற அரசு விழா.. மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் இதை கவனித்தீர்களா?