Tamilnadu

குழந்தையின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத அமைச்சர் ஆர்.காந்தி... பேரணாம்பட்டில் சோகம்!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்த நிலையில், ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் ஆர்.காந்தி குழந்தையின் சடலத்தைக் கண்டு தேம்பி அழுதார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை அனைத்துத் தரப்பினருக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மழையால் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி.

அப்போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்த அமைச்சர் ஆர்.காந்தி துக்கம் தாளமுடியாமல் தேம்பி அழுதார். இந்நிகழ்வு அங்கிருந்தோரை வேதனையில் ஆழ்த்தியது.

Also Read: “பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தியது நீங்க.. மாநில அரசு குறைக்கணுமா?”- பா.ஜ.கவினருக்கு நிதி அமைச்சர் பதிலடி!