Tamilnadu
“ஊழியரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது” : கரூர் போலிஸார் அதிரடி நடவடிக்கை!
கரூரில் உள்ள ஜி.சி மருத்துவமனையில் மருத்துவராக டாக்டர் ரஜினிகாந்த் உள்ளார். இந்த மருத்துவமனையில் கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு போனஸ் வழங்கப்படாததால், அந்தப் பெண்மணி வேலைக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மருத்துவமனை மேலாளர் சரவணன் அந்தப் பெண்ணின் 17 வயது சிறுமியை போனில் தொடர்பு கொண்டு, “உன் அம்மாவின் சம்பளத்தை வந்து வாங்கிட்டுப் போ” என மருத்துவர் ரஜினிகாந்த் அழைத்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, 17 வயது சிறுமி மருத்துவமனைக்கு தனியாகச் சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தனி அறையில் மருத்துவர் ரஜினிகாந்த் அந்தச் சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தச் சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு அவரது தாயார் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ரஜினிகாந்த் அதற்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் ரஜினிகாந்த் தலைமறைவாகிவிட்டார். மருத்துவமனையின் மேலாளர் சரவணன் உடனடியாக கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த மருத்துவரை கைது செய்ய துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கோவையில் பதுங்கியிருந்த டாக்டர் ரஜினிகாந்த்தை தனிப்படை போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர். இதையடுத்து, கரூர் கொண்டுவரப்பட்டு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி நசீமா பானு அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலிஸார் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!