Tamilnadu

மயங்கி விழுந்த நபர்.. முதுகில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளர்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வேற்று வலுப்பெற்று சென்னை அருகே நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாகச் சென்னையில் நேற்று மதியத்திலிருந்தே விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் இன்று காலையிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், போலிஸார், பேரிடர் மீட்புக்குக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு விரைந்து வந்து உதயாவை தனது முதுகில் தூக்கிக் கொண்டு வந்து பிறகு ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை நெகிழச்சிய ஏற்படுத்தியுள்ளது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் சேய்.. பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக்குழு!