Tamilnadu

“இந்த தலை அந்த உடலோடு...” : போட்டோஷாப் செய்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசனின் அடடே விளக்கம்!

பா.ஜ.கவின் தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ”டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.க குடும்ப உறுப்பினர்களுடன்” எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில், அவரது புகைப்படம் போட்டோஷாப் மூலம் இணைக்கப்பட்டிருந்தது நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளானது.

பா.ஜ.க எம்.பி ராஜ்குமார் சாகர் உள்ளிட்டோர் பதிவிட்ட ட்விட்டர் புகைப்படங்கள் மற்றும் இக்கூட்டம் குறித்து வெளியான செய்திகளின் புகைப்படத்தில் வானதி சீனிவாசன் இடம்பெறவில்லை.

ஆனால், வானதி சீனிவாசன் பதிவிட்ட புகைப்படத்தில் மட்டும் ஓரமாக அவர் நிற்பதுபோல் போட்டோஷாப் செய்திருந்தார். வானதி சீனிவாசன் பதிவின் கமெண்ட்களில் பலரும் போட்டோஷாப்பில் புகைப்படம் இணைக்கப்பட்டதை கிண்டல் செய்து பதிவிட்டு வந்தனர்.

போட்டோஷாப் செய்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசன், ”நான் டெல்லி சென்றது உண்மைதான். ஆனால், குழு புகைப்படம் எடுக்கும்போது சற்று தாமதமாக சென்றதால் பலரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர். இதனால் ஒரு நினைவுக்காக, என்னை போட்டோகிராபர் தனியாக புகைப்படம் எடுத்து குழு புகைப்படத்துடன் இணைத்துக் கொடுத்தார்” என விளக்கமளித்துள்ளார்.

பா.ஜ.கவின் போட்டோஷாப் உத்தியை பற்றிக் கேட்டால், போட்டோஷாப் செய்வது எப்படி என வானதி சீனிவாசன் விளக்கம் அளிப்பதாக நெட்டிசன்கள் மீண்டும் கிண்டல் செய்து வருகின்றனர்.

அண்மையில்தான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை கொளத்தூரில் வெள்ளத்தைப் பார்வையிடுவதாகச் சென்று போட்டோஷூட் செய்து பொதுமக்களால் கடுமையான கிண்டலுக்கு உள்ளானார்.

இந்நிலையில், வானதி சீனிவாசன் போட்டோஷாப் சர்ச்சையில் சிக்கியுள்ளார். போட்டோஷாப் மூலமாகவே ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க என விமர்சிக்கப்படும் நிலையில், இவர்களின் செயல்கள் அவற்றை மெய்ப்பிக்கும் விதமாகவே உள்ளன.

Also Read: “வீடியோ எப்போ சார் ரிலீஸ் பண்ணுவீங்க?”: அண்ணாமலையை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்- ட்ரெண்டாகும் #GoatonBoat