Tamilnadu

“200 மருத்துவ முகாம்.. இரண்டு லட்சம் உணவுப் பொட்டலங்கள்” : மக்கள் மனதில் நம்பிக்கை ஒளிபாய்ச்சிய முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், இராயபுரம், ஆர்.கே. நகர், பெரம்பூர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6.11.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை நேற்று (7.11.2021) முதலமைச்சர் அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில், கனமழையால் வெள்ளநீர் வடியும் பக்கிங்ஹாம் கால்வாயை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத் திரையரங்கம் ரவுண்டானா பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, பால், ரொட்டி, பாய், போர்வை, துண்டு போன்ற நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

பின்னர், ஆர்.கே. நகர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி, பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து, கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் அவர்கள் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முல்லை நகர், பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், மகாகவி பாரதியார் நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இறுதியாக அன்னை சத்யா நகரில் முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி, மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் மின்மோட்டார் பொருத்திய படகுடன் மூன்று மீனவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிட 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றரை இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read: DeMonetisationDisaster : “என் பொழப்பே போச்சுங்க” - சிறுகுறு வியாபாரிகள் வேதனை! #Exclusive