Tamilnadu

“உயிருக்கு போராடிய முதியவரை நாயின் உதவியுடன் காப்பாற்றிய சமூகஆர்வலர்”: நெகிழ்ச்சி சம்பவம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூரை நோக்கி சமூக ஆர்வலர் கென்னடி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, முத்தையாபுரம் அருகே சாலையின் ஓரத்தில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் அருகிலிருந்து ஒரு நாய் ஒன்று சாலை செல்பவர்களை நோக்கி மிக ஆக்ரோசமாக சத்தமாக குரைத்துள்ளது.

நாய் ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக குறைக்கிறது என காரை நிறுத்தி கென்னடி பார்த்த போது, வயதான முதியவர் ஒருவர் பள்ளத்தில் தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை நாய் காண்பித்துள்ளது. உடனே சாலையில் சென்ற பலரை உதவிக்கு அழைத்துள்ளனர் யாரும் உதவிக்கு வரவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு மூன்று இளைஞர்கள் உதவிக்கு வந்துள்ளனர்.

இந்த இளைஞர்களின் உதவியோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை தூக்கி பார்த்த போது அவர் சாலை ஓரமாக நடந்து சென்றபோது வயது முதிர்வின் காரணமாக கால் தடுக்கி கீழே விழுந்து முகத்தில் அடிபட்டு ரத்த காயங்களுடன் பேசுவதற்கு கூட சக்தியில்லாமல் இருந்துள்ளார்.

உடனே சாலை ஓரத்தில் முதியவரை அமர வைத்து, 108க்கு ஃபோன் செய்து அழைத்துள்ளனர். 108 வருவதற்குள் தேவையான முதலுதவிகள் செய்து அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது தனது பெயர் முத்தையா வயது-77. சொந்த ஊர் சாயல்குடி மனைவி இறந்து விட்டதாகவும் கடந்த 12 வருடங்களாக தருவைகுளத்தில் வேலை செய்வதாகவும் முத்தையாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மழையில் தவறி கீழே விழுந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த108 ஆம்புலன்ஸ் முதியவரை அழைத்துச் சென்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றது. தற்போது அந்த முதியவருக்கு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவரின் குறித்து அவரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவரின் உறவினர்கள் யாரும் அவரை தேடி வரவில்லை. அந்த நாய் மட்டும் குறைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அந்த முதியவரை யாரும் காப்பாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதனின் உயிரை காப்பாற்ற தெரு நாய்க்கு இருந்த மனிதநேயம் உறவினர்கள் இல்லாமல் போனது வருத்தப்படக்கூடிய நிகழ்வு என அப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.

Also Read: “18 நாட்களில் 82 கோடிக்கு விற்பனை” : ஆவின் பால் பொருட்கள் விற்பனையில் புதிய சாதனை படைத்த தி.மு.க அரசு!