Tamilnadu

“நீங்கள் அநாதைகள் அல்ல.. நான் உங்கள் உடன்பிறப்பு” : இலங்கைத் தமிழர்களுக்கு நம்பிக்கையளித்த முதலமைச்சர்!

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இலங்கை அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்றும், இலங்கை தமிழர் மேம்பாட்டுக்காக ரூபாய் 317 கோடியில் புதிய நலத் திட்டங்களையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தின் தொடக்க விழா இன்று வேலூரை அடுத்த மேல்மொணவூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 220 இலங்கை தமிழர் குடும்பங்கள் உட்பட 3,510 பேருக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ““ஓர் அடையாளச் சொல்லாகத்தான் இலங்கைத் தமிழர்களே என்று நான் அழைத்தேன்! மற்றபடி தமிழர்கள் அனைவரும் எங்கே, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். தமிழகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் இனத்தால் மொழியால் பண்பாட்டால் நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள். நாம் அனைவரும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். கடல் தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர், நம்மை மீண்டும் இணைத்திருக்கிறது.

“அவர்கள் அகதிகள் அல்ல, அநாதைகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம். அகதிகள் முகாம் என்று இனி அழைக்கமாட்டோம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்றே அழைப்போம்'' என்று சொல்லி தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நான் அறிவித்தேன். அதனைச் செயல்படுத்தும் நாள் தான் இது. அதற்காகத்தான் இந்த முகாமுக்கு நான் வந்திருக்கிறேன்.

நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது, நாங்கள் இருக்கிறோம் என்பதுதான். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது நீங்கள் அநாதைகள் அல்ல என்பதுதான். என்னை உங்களின் உடன்பிறப்பாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் மூடினால் மற்றொரு ஜன்னல் திறக்கும் என்பார்கள். இலங்கைத் தமிழர் நலனுக்காக தமிழ்நாடு அரசு தனது கதவையே திறந்து வைத்துள்ளது.” எனப் பேசினார்.

Also Read: “ ‘ஜெய்பீம்’ படத்தின் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக்கிவிட்டன” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!