Tamilnadu

“பயன்படுத்த இயலும் நிதியை கண்டறிய ஒரு சிறப்பு பணிக்குழுவை இந்த அரசு அமைக்கும்” : நிதி அமைச்சர் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் மற்றும் கூட்டுறவுக் கடன் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் மற்றும் கூட்டுறவு கடன்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது . இறந்தவர்கள் பெயரில் முதியோர் ஓய்வூதியம் வழங்கிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சில இடங்களில் எந்த நகையும் அடகு வைக்காமல் நடைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின்போது, "கருவூல அமைப்புகளின் கண்காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாகப் பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த அரசு பதவியேற்ற பின், அத்தகைய நிதிகளைக் கண்டறிய இரட்டைக் கணக்கெடுப்பு முறை ஒன்று தொடங்கப்பட்டது.

அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும், அத்தகைய கணக்குகள் உள்ள வங்கிகளிலும் இந்த நிதியைக் கண்டறிவதற்கான முதல் கட்ட ஆய்வில் கணிசமான நிதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறிய கணக்குகளை முழுமையாக சரி செய்யவும், அதில் பயன்படுத்த இயலாத நிதியையும், பயன்படுத்தக்கூடிய நிதியையும் கண்டறிய, நிதித்துறையின் மூத்த அதிகாரியின் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழுவை இந்த அரசு அமைக்கும்." எனத் தெரிவித்தார்.

அதற்கிணங்க, அரசுத்துறைகள், அரசால் நடத்தப்பெறும் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் கருவூலத்திற்கு வெளியே இருப்பில் வைக்கப்பட்டிருந்த நிதியைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் கண்டறியவும் பிறகு சரிபார்த்து அவற்றை அரசுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.

31.03.2021 அன்று உள்ளவாறு வங்கிக் கணக்குகளில் இருப்பில் இருந்த அரசு நிதி குறித்த விவரங்கள், வங்கிகள், மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறைகள் மற்றும் ஏனைய அரசு சார்பு நிறுவனங்கள் போன்ற பல்வேறு தரப்புகளின் வாயிலாக சேகரிக்கப்பட்டது. மேலும், சிறப்புக்குழுவானது, இதற்காகப் பயன்படுத்தத்தக்க ஒரு தரவுத்தொகுப்பைக் கட்டமைக்கும் நோக்கில், அநேக அரசுத் துறைகளுடனும், மாநில அளவிலான வங்கிகள் குழுவுடனும் பல்வேறு கூட்டங்களை நடத்தியது.

சிறப்புக்குழு, விவரங்களைத் தொகுத்து, பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இருப்பிலுள்ள தொகை, தேவைப்படும் தொகை, அரசுக்கணக்கில் செலுத்த உள்ளவை என்று பெருவாரியான இனங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகைப்பாடு, முடிவுற்ற திட்டங்கள், நடப்புத் திட்டங்கள் மற்றும் துறையின் வருவாயினங்கள் ஆகிய ஒவ்வொன்றின் கீழும் தனித்தனியாக செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முறையைக் கையாண்டு, இது வரை திரட்டப்பட்டபட்ட தரவுகளைக் கொண்டு, சிறப்புக் குழுவானது அரசுக் கணக்கில் உடனடியாக திருப்பிச் செலுத்தத்தக்கது என்று ரூ.1946.31 கோடியை இனம் கண்டுள்ளது.

சிறப்புக்குழுவானது, தெரிவிக்கப்பட்ட கணக்கு விவரங்களை, குறிப்பாக இருப்பிலுள்ள தொகை, தேவைப்படும் தொகை ஆகிய இனங்களைத் தணிக்கை செய்வது, மேலும் அவற்றை துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வங்கிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களோடு சரிபார்ப்பது ஆகிய பணிகளைத் தொடர வேண்டியுள்ளது. இதன் மூலம் அரசுக் கருவூலத்தில் செலுத்திடத்தக்க, பயன்படுத்தப்படாத கூடுதல் நிதிகளையும் கண்டறிவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது. இப்பணியை மேற்கொள்ள, சிறப்புக்குழுவுக்கு 2022, மார்ச், 31 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுவதோடு, களத்திற்கே சென்று தணிக்கையும், சரிபார்ப்பும் செய்யுமாறு குழு கேட்டுக்கொள்ளப்படும்.

அரசு நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பில் வைத்திருக்கக்கூடிய, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில், மீண்டும் நேராமல் தவிர்க்கும் விதமாக ஒரு செயற்கட்டமைப்பை வடிவமைப்பது அவசியமாகிறது. இந்த நோக்கத்தில், கருவூலம் தொடங்கி - ஓய்வூதியர்கள், சம்பளம் பெறும் அரசு அலுவலர்கள், முதியோர் ஓய்வூதியப் பயனாளிகள், கல்வி உதவித்தொகை பெறுவோர், சரக்கு மற்றும் சேவை வழங்கல் தொடர்பான பணிகளுக்கான இறுதி தொகை பெறுவோர் என அனைத்து இறுதி பயனாளிகள் ஈறாக - அனைத்துப் பயனாளிகளுக்கும் நேரடியாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) அமைப்பின் வாயிலாக தொகை வழங்கப்படுவதன் மூலம், வரவு-செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளில் கணிசமான நிதி உடனடியாகப் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

சில திட்டங்கள், அரசின் இடைநிலை முகமைகளான நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே தொடர்ந்து செயல்படவேண்டி இருக்கும். அத்திட்டங்களுக்காக, மாநில அளவிலான ஒரு பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) முகமை வங்கிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த அமைப்பின்படி, திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசுக் கருவூலத்திலிருந்து நிதியைப் பெற்று, பிறகு, முகமை நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் நிதியானது, நிதித்துறையின் பார்வை வரம்பிற்குள்ளாகவே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுவதோடு, அதைத் தொடர்ந்து, உரிய இறுதிப் பயனாளியை அந்நிதி சென்றடையும் வரை தொடர்ந்து நிதியோட்டம் கண்காணிக்கப்படும். திட்டத்திற்கென முன்னதாக விடுவிக்கப்பட்ட தொகை முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட பிறகே, அத்திட்டத்திற்கான கூடுதல் நிதிகள் அரசுக் கருவூலத்திலிருந்து விடுவிக்கப்படும். வழங்கப்பட்ட நிதி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால், அவை அப்படியே முழுமையாக அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

மாண்புமிகு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு அளித்த பல்வேறு முக்கியமான பரிந்துரைகளின் மீது இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதியோர் ஓய்வூதியத் திட்டத்தினை விரிவுபடுத்துதல், கோவிட் பெருந்தொற்று காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காக “இல்லம் தேடி கல்வி” மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்புச் சலுகை திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

தரவுகளை மையமாகக் கொண்டுள்ள ஆளுகையினை செயல்படுத்துவதற்கான தமிழக அரசின் முன்னோடி முயற்சிகளுக்கு பொருளாதார ஆலோசனைக் குழுவும்கூட தங்களது மிகுந்த ஆதரவையும் / வரவேற்பையும் தெரிவித்ததோடு, மேலும் பின்பற்றக் கூடிய சில ஆலோசைனைகளை வழங்கியுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பொது விநியோகத் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்ற பெருவாரியான பயனாளிகளைக் கொண்ட பெருந்திட்டங்களின் தரவுகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்த ஆவணங்களை பராமரித்து வரும் சிவில் பதிவு முறை போன்ற தகவல் தொகுப்புகளில் இருந்து, (குடும்ப அட்டையில்), புதிய நபர்களின் பெயர்களை சேர்ப்பதையும். (அக்குடும்பத்தில் இறப்பு நேரிடுகையில்) இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதையும், குடும்ப அட்டை குறித்த தகவல் தொகுப்பில் நேரடியாகவே மேற்கொள்ள இயலும்.

இம்மாதிரியான தானாகவே சேர்த்தலும், நீக்கலும் நடைபெறும் செயல்முறை மாநில மக்களுக்கு முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும் என்பதோடு, குறைந்த செலவில் திட்டத்தினை திறம்பட செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, இந்த அணுகுமுறை, இறந்த நபர்களுக்கு தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுவது மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் மாதாந்திர அரிசி ஒதுக்கீடு வழங்கப்படுவது ஆகியவற்றிற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாக நீக்கிவிடும் - ஏனெனில், கடந்த சில மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இதுபோன்ற சில நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளோம்.

அதேபோன்று, கூட்டுறவு வங்கிகளின் பயிர்க்கடன் மற்றும் கூட்டுறவுக் கடன் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரே நபர் பலமுறை, பல்வேறு சங்கங்களிலிருந்து, ஒரு சிறிய வேளாண் நிலத்திற்காக கடன் பெற்றுள்ளார். சில இடங்களில் எந்த நகையுமே அடகு வைக்கப்படாமல் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும், இந்த புதிய அணுகுமுறையின் மூலமாக திறம்பட தீர்வு காணப்படும்.

மாண்புமிகு முதலமைச்சரின் திறமையான, சிறந்த தலைமையின்கீழ், சிறந்த இலக்குகளுடன் கூடிய திட்டங்களை வழங்குவதில், தெரிவின்போது உள்ளடக்குவதிலும், புறந்தள்ளுவதிலும் உள்ள பிழைகளைக் குறைத்து, செயல்திறனைக் கூட்டவும், தேவையில்லாத செலவுகளைக் குறைக்கவும் கழக அரசு தொடர்ந்து பாடுபடும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவை... உடனடியாக நிதியை விடுவியுங்கள்” : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!