Tamilnadu
பெட்ரோல், டீசல் விலையை உச்சத்துக்கு கொண்டுசென்ற மோடிக்கு மலர்தூவி மரியாதை... காணாமல் போன மோடி படம்?!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் பிரதமர் மோடி உருவப்படத்துக்கு மலர்தூவும் நூதன போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது. 12-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடி உருவப்படத்துக்கு மலர் தூவும் நூதன போராட்டத்தை த.பெ.தி.க அமைப்பினர் இன்று நடத்தினர்.
கோவை அவிநாசி சாலையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நடந்த போராட்டத்திற்கு த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் விலையை உலகிலேயே அதிகமாக உயர்த்தி சாதனை படைத்ததாக மோடியின் உருவப்படத்திற்கு மலர் தூவினர்.
முன்னதாக மலர் தூவும் போராட்டம் அறிவிக்கப்பட்டதுமே, அந்த பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் குறித்து த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே நாடு முழுவதும் பெட்ரோல் விலையை ரூ.70 க்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசால் முடியும். ஆனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டீசல், பெட்ரோல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!