Tamilnadu

YOUTUBE பார்த்து வீட்டிலேயே கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்.. கைமாற்றும்போது சிக்கியது எப்படி?

சேலம் மாவட்டம், காக்காபாளையத்தை அடுத்த தப்பக்குட்டை பகுதியில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டிருந்தனர்.

இவர்கள் மீது சந்தேகமடைந்த போலிஸார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கிப் பார்த்தபோது 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அனைத்து நோட்டுகளும் கள்ள நோட்டுகள் என்பதை போலிஸார் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் தப்பக்குட்டைச் சேர்ந்த பொன்னுவேல், சதீஷ் என்பது தெரியவந்தது. இவர்களுடன் சின்னத்தம்பி என்ற நபரும் கூட்டுச் சேர்ந்துள்ளதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்த மூன்று பேரும் சேர்ந்து, யூடியூபில் கள்ள நோட்டுகள் அடிப்பது எப்படி எனப் பார்த்து வீட்டிலேயே 100, 500, 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளனர். தற்போது தீபஒளி பண்டிகையால் கடைகளில் அதிகமான கூட்டம் இருக்கும் என்பதால் இதைப் பயன்படுத்தி இந்த பணத்தைக் கைமாற்றத் திட்டம் போட்டுள்ளனர்.

அப்படி அச்சடித்த பணத்தை எடுத்துச் செல்லும்போதுதான் இவர்கள் போலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து பொன்னுவேல், சதீஷ், சின்னத்தம்பி ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 1.40 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் போலிஸார் பறிமுதல் செய்தனர்.

Also Read: 10 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. காட்டி கொடுத்த செல்போன் சிக்னல்: நடந்தது என்ன?