Tamilnadu

தென்மாநிலங்களை கலக்கிய கொள்ளைக்கூட்ட தம்பதி.. சென்னையில் கைதானவர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்!

சென்னையில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தமிழகம், ஆந்திரா என பல மாநிலங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து ஜாலியாக வாழ்ந்த நெல்லை தம்பதி, சென்னையில் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலின் மிகப்பெரிய நெட்வொர்க்கை போலிஸார் தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். கடந்த ஒன்றாம் தேதி இரவு, வீட்டு மேல்மாடியில் உறங்கினார். காலையில் எழுந்தபோது கீழ்வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்து 100 பவுன் நகை மற்றும் வைர நகைகள், வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் ரூ. 85 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலிஸில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் வேல்முகன் தலைமையிலான போலிஸார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்களில் சிலர் பழைய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து உஷாரான போலிஸார் தொடர் விசாரணை நடத்தி நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த தினகரன் (35), அவரது மனைவி உஷா (27), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவா (32), திருப்பத்துார் மாவட்டம் ஜோலார் பேட்டையை சேர்ந்த லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருட்டு நகைகளை வாங்கிய எர்ணாவூரைச் சேர்ந்த மோகன் (55), ராணி (48) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 65 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரொக்கம் ரூ. 2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளையர்கள் குறித்து விசாரணை அதிகாரி கூறுகையில், “தினகரனுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம், கடையம். சென்னைக்கு வந்து நீண்டகாலமாகிறது. கொளத்துார், திருவொற்றியூரில் உறவினர்கள் வீடடில் தங்கி, அவ்வப்போது ஏதாவது ஒரு கொள்ளையை நிகழ்த்துவதில் கில்லாடி.

இவனை நம்பி பூட்டு உடைப்பவர்கள், கள்ளச் சாவி போடுபவர்கள் என ஒரு கும்பலே உள்ளது. வீடு புகுந்து கொள்ளையடிப்பதில் நிபுணராக உள்ள தினகரனுக்கு திருவாரூரைச் சேர்ந்த கொள்ளையன் முருகன் தான் தொழில் குரு.

வசதியானவர்கள் வசிக்கும் பகுதிக்கு தம்பதியாக தினகரனும், அவரது மனைவி உஷாவும் மாலையில் ஆட்டோவில் செல்வர். அப்போது எந்த வீடெல்லாம் பூட்டிக் கிடக்கிறது என்பதை கண்காணிப்பர். மீண்டும் இரவு 8 மணிக்கு அதே பகுதிக்கு வந்து பூட்டிய வீடுகளை உறுதி செய்வர். அதன்பிறகு இரவு 12 மணிக்கு மேல் வீட்டு பூட்டை உடைத்து, பீரோக்களில் உள்ள நகை, பணத்தை கொள்ளை அடித்து தலைமறைவாகி விடுவர். கிடைக்கிற நகைகளில் ஆளுக்கு கொஞ்சமாக பிரித்துக் கொள்வர்.

அதில் கிடைக்கும் பணத்தில் ஜாலியாக வாழ்க்கை நடத்துவர். பணம் கரைந்ததும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவர். இப்படியாக பெங்களூர், ஆந்திரா, ஒசூர், சென்னை என பல இடங்களில் கொள்ளை சம்பவங்களை நடத்தி உள்ளனர்.

தினகரன் மீது மட்டுமே 17 திருட்டு வழக்குகள் உள்ளன. கொள்ளை நகைகளை வாங்கிக் குவிக்கும் மோகன் மீது 6 வழக்குகள் உள்ளன. இவர்கள் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க்கே உள்ளது. எனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட தினகரனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Also Read: தனியாக இருந்த மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. நண்பருடன் சேர்ந்து இளம்பெண் நடத்திய ‘பகீர்’ கொள்ளை!