Tamilnadu

“நவம்பர் 1ஆம் தேதியே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி அரியமங்கலம் லட்சுமி மழலையர் பள்ளியில் நடைபெற்ற கொரோனா பாதிப்பு குறித்த ஓவியக் கண்காட்சியை நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அப்போது பேசிய அவர், “நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயமில்லை. தீப ஒளித் திருநாளுக்குப் பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் அதன் பிறகு வரலாம்.

மாணவர்கள் காலை எழுவது, உணவு அருந்துவது, பள்ளிக்கு வருவது போன்ற ஒழுக்க நடவடிக்கைகளை போதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 45,000 பள்ளிகள் உள்ளன. அவற்றில் இந்தாண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பகுதிகளில் இடப் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு இடப் பிரச்சினை எழும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அருகே உள்ள எண்ணிக்கை குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

நீட் தேர்வு ரத்து குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக எ.ம்பிக்கள் மூலமாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எந்தளவிற்கு மதிப்பு அளிக்கப்படுகிறது என்பது அறிந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் அனைத்தும் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால் போதிய பராமரிப்பின்றி உள்ளது. பள்ளிகளில் உள்ள மின்சார சாதனங்கள், கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. அதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித் துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Also Read: ”மாணவர்களை துன்புறுத்தினால் இனி இதுதான் கதி” - ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!