Tamilnadu

வேதாரண்யம் அருகே மீனவர்களிடையே மோதல்.. 4 பேர் படுகாயம் : போலிஸ் விசாரணை - நடுக்கடலில் நடந்தது என்ன ?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தரங்கம்பாடியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் படகு உரிமையாளர் குப்புசாமி சின்னையன், தர்மலிங்கம் , பெருமாள் ஆகிய 4 பேரும் கோடியக்கரை கடற்கரையில் இருந்து நேற்று மாலை மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரைக்கு தெற்கே சுமார் 10 கடல்மைல் தொலைவில் அதிகாலை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது திடீரென்று ஸ்ரீ ஐய்யனார் துணை என்று எழுதப்பட்டிருந்த தமிழ் நாட்டை சேர்ந்த படகில் வந்த ஐந்து நபர்களில் இரண்டு நபர்கள் குப்புசாமி படகில் ஏறி கையில் வைத்து இருந்த இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு சென்று விட்டனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு மீனவர்களும் உடனடியாக தங்கள் படகை எடுத்து கொண்டு அதிகாலை கோடியக்கரை கடற்கரைக்கு வந்து தனியார் வாகனம் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்பு நான்கு மீனவர்களையும் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படடனர். மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீ ஐய்யனார் படகில் வலை சிக்கி சேதம் அடைந்த காரணத்தால் கோபம் அடைந்த மீனவர்களை தாக்கியதாக தெரிய வருகிறது.

தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் அவ்வப்போது தாக்கி படுகாயம் அடைந்து வந்த நிலையில், தற்போது தமிழக மீனவர்களை தமிழக மீனவர்களே தாக்கி கொண்ட சம்பவம் மீனவ கிராமங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேதாரணியம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Also Read: “சனங்ககிட்ட சந்தோசம் இருக்கு..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி குறித்து மனம் திறந்த நடிகர் வடிவேலு!