Tamilnadu

சென்னை IITல் 45 நாய்கள் மர்ம மரணம்; மான்கள் காரணமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடி விசிட்!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 45 நாய்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன், இன்று நேரில் ஆய்வு நடத்தினார். நாய்களை பராமரிக்க அமைக்கப்பட்டுள்ள தொழுவத்தை பார்வையிட்ட அமைச்சர், அங்கு பராமரிக்க கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அங்குள்ள பணியாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "617 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை ஐஐடி வளாகத்தில் 2020 அக்டோபரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படி 188 நாய்கள் இருந்துள்ளன. பல்வேறு காரணங்களுக்காக, அந்த நாய்கள் அனைத்தையும் பராமரிக்க ஐஐடி நிர்வாகம் சார்பில் தனி குழு அமைத்துள்ளனர். மேலும் 10, 600 சதுர அடியில் இரண்டு ஷெட்கள் அமைத்து 9 நிரந்தர பணியாளர்கள் மூலம் நாய்களை பராமரிக்கிறார்கள். அந்த வகையில் 14 நாய்கள் வெறித்தனம் இல்லாத நிலை காரணமாக வெளியில் விடப்பட்டுள்ளன. இதுவரையிலான ஓராண்டில் 56 நாய்கள் இறந்துள்ளன. நாய் வளர்க்க விருப்பம் தெரிவித்து வெளியில் இருந்து கேட்டவர்களிடம் 29 நாய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படி பெற்றவர்களின் பட்டியலை கேட்டுள்ளோம். மேலும் இரண்டு நாய்கள் தப்பு ஓடி விட்டன. தற்போது 87 நாய்கள் பராமரிப்பில் உள்ளன.

இறந்து போன 56 நாட்களில் பெரும்பான்மையானவை முதுமை மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவே 8 முதல் 10 ஆண்டுகளை கடந்த நாய்களே உயிரிழந்துள்ளன. அவற்றில் ஒரு நாயின் மாதிரிகளை எடுத்து போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எடுக்க அனுப்பி, முடிவுக்காக காத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு குறித்து செய்தி வந்ததும், கால்நடை பராமரிப்பு, மாநகராட்சி உள்ளிட்ட பல்துறை அலுவலர்களுடன் சென்று உடனடியாக ஆய்வு நடத்தியுள்ளோம்.

ஐ.ஐடி பதிவாளர் நேரடியாக கலந்து கொண்டார். நாய்கள் வளர்க்கப்படும் விதத்தை பார்வையிட்டோம். நாய்களின் இறப்புக்கான காரணமாக ஐ.ஐ.டி தரப்பில் சொல்வது, இந்த வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன. அரியவகை மானும் உள்ளது. அவற்றில் குட்டி மான்களை நாய்கள் வேட்டையாடியுள்ளன. அதற்கான புகைப்படங்களை எங்களிடம் காட்டினார். அதன் பின்னரே நாய்களை தனியாக பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இருந்தாலும் மான்களை போல நாய்களும் உயிர் தான் என்பதால் இரண்டையும் ஒரே மாதிரியான நிலையில் பராமரிக்க கேட்டுக் கொண்டோம்.

அவர்களும் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு தன்னார்வலர் குழுக்கள் இங்கு வந்து நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். 2018ல் 92 மான்கள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 55 மான்கள் நாய்கள் கடித்தால் உயிரிழந்துள்ளதாக பதிவினை காண்பித்தனர். 2019ல் 38 மான்களும், 2020ல் 28 மான்களும் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டுதான் எந்த மான்களும் உயிரிழக்கவில்லை என தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி, இங்கு புதிதாக வருகின்ற நாய்கள் குறித்து உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியும் தயாராக உள்ளது. அதேபோல தன்னார்வலர்கள் தத்து எடுக்க விரும்பினால், அவர்களின் பின்புலம் அவர்களால் நாய்களை முறையாக பராமரிக்க முடியுமா என்பது பற்றி விசாரிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம்" என்றார்.

Also Read: விண்ணை முட்டும் டீசல் விலை; கேக் வெட்டி துக்கத்தை வெளிப்படுத்திய லாரி உரிமையாளர்கள்!