Tamilnadu

சென்னை மக்களே கவனம்.. இனி கண்ட இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!

சென்னையை அழகுபடுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு அழகான ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

இந்த ஓவியங்கள் சென்னையில் முக்கியத்துவத்தையும், தமிழ்நாட்டின் கலைகளை பிரதிபலிக்கும் விதத்தில் வரையப்பட்டு வருகிறது. அதேபோல், மழைக்காளங்களில் சாலையில் கழிவு நீர் தேங்காமல் இருக்கவும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பையை வீசுபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பையைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதமும், தரம் பிரிக்கப்படாத குப்பையை கொட்டுபவர்கள், தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100 அபராதமும், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000 அபராதமும், பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், பொது இடங்களில் கட்டிட இடிபாடுகளை கொட்டுபவர்களுக்கு 1 டன் வரை ரூ.2,000 அபராதமும், 1 டன்னிற்கு மேல் ரூ.5,000 அபராதமும், தோட்ட கழிவுகள், மரக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.200 அபராதமும், கழிவுநீர் பாதை, கால்வாய், நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதமும், திடக்கழிவுகளை எரிப்பவர்கள், தனியார் இடங்களுக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்களுக்கு ரூ.1,000 அபராதமும் வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கிராம மக்களின் உணர்வுதான் ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வு.. மாநகராட்சி தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறும்!