Tamilnadu
மெரினாவில் உயிர்காப்பு பிரிவு; நாட்டிலேயே முதல்முறை; தமிழ்நாட்டு போலிஸின் அசத்தல் நடவடிக்கை!
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் கீழ் செயல்படும் மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி உயிருக்கு போராடுபவர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.
கூடுதல் டி.ஜி.பி சந்தீப் மிட்டலின் தலைமையில் செயல்படும் கடலோர பாதுகாப்புக் குழுமம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை ட்ரோன்களைப் பயன்படுத்தி காக்க திட்டம் வகுத்து வருகின்றனர். குறிப்பாக உயிர் காக்கும் மிதப்பான்களை ட்ரோன்கள் மூலம் விரைவாக தண்ணீரில் தத்தளிப்பவர்கள் வசம் கொண்டு சென்று கொடுத்து அவர்கள் நீரில் மூழ்கி விடாமல் காக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன்கள் கடற்காற்றுக்கு எதிராக நிலையாக நின்று செயல்படும் வகையிலும், கடற்கரையைவிட்டு 4 கி.மீ தொலைதூரம் செல்லும் திறன்கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு குளிக்க வரும் பொதுமக்கள் அலையில் சிக்கி நீரில் மூழ்கி பலியாகும் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்த திட்டமானது வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் கடலோர பாதுகாப்புக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் கடலோர பாதுகாப்புக் குழுமம், சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை உயிர்காப்புப் பிரிவிற்காக அவசர உயிர்காப்பு சேவைக்காக 24 மணி நேரமும் 2 ஆம்புலன்ஸ்களை கடற்கரை சாலையில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கண்காணிப்பு கோபுரங்களை அதிகரிக்கவும், 50 ஆயுதப்படைக் காவலர்களுக்கு உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து பணியமர்த்தவும், 12 உயிர்காக்கும் பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலில் மூழ்கி பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகமாகி வரும் சூழலில் இத்திட்டங்கள் மூலம் பல உயிரிழப்புகளை தவிர்க்க இயலும் எனவும் கடலோர பாதுகாப்புக் குழுமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!