Tamilnadu
மனு அளித்த 1 மணி நேரத்தில் பணி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்... நெகிழ்ந்து நன்றி தெரிவித்த பெண்!
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த ஒரு மணி நேரத்தில் பெண்ணுக்கு அரசு வேலைக்கு பணிநியமன ஆணை வழங்கியுள்ளார் மாவட்ட ஆட்சியர்.
வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. அக்டோபர் மாதத்திலிருந்து குறைதீர் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, இரண்டாவது வாரமாக நேற்று அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த தெய்வானை என்பவர், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தார்.
அவரது மனுவில், “கடந்த மே மாதம் என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர். மற்றொருவர் இதயக் குறைபாட்டுடன் பிறந்தவர். கணவர் இறந்தபிறகு வருமானம் இன்றி தவித்து வருகிறேன். அதனால், வருமானத்துக்கு வழிசெய்ய ஏதேனும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
தெய்வானையின் மனுவை பரிசீலனை செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மனு அளித்த ஒரு மணி நேரத்தில், தூத்துக்குடி சிப்காட் நில எடுப்புப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்ற தற்காலிகப் பணி ஆணையை அவரிடம் வழங்கினார். இந்நிகழ்வு அங்கிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெய்வானை கூறுகையில், “எனது நிலைமையை புரிந்துகொண்டு, உடனடியாக தற்காலிக பணி ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி. இதன்மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவற்ற நிலையில் வீடு கேட்டு கடந்த 10 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்த பெண்ணுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் ஒரு மணி நேரத்தில் வீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!