Tamilnadu

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்த போலி போலிஸ்: நிஜ போலிஸிடம் சிக்கியது எப்படி?

மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி சாலையில் வாகன ஓட்டிகளிடம் போலிஸ் என கூறி ஒருவர் பணம் வசூல் செய்து வருவதாகப் பெருங்குடி காவல்நிலையத்திற்குப் புகார் வந்துள்ளது.

இதையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலிஸார் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது போலிஸ் உடை அணிந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இந்த நபர்,அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை போலிஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கரந்தைமலை என்பது தெரியவந்தது. மேலும் இவர் மதுபானம் மற்றும் கஞ்சா விற்று வந்ததும் தெரிந்ததை அடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் பதுக்கிவைத்திருந்த மதுபாட்டில்கள், கஞ்சா பொட்டலங்களை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

Also Read: ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய IT ஊழியர்;பெற்றோர் கண்டித்ததால் நடந்த விபரீதம்: வாணியம்பாடியில் நடந்த சோகம்!