Tamilnadu

“காவிரி விவகாரத்தில் தண்ணி காட்டிய பாஜக - அதிமுக” : ஒரு நியமனம் சொல்லும் இரண்டு செய்திகள்? - முரசொலி!

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (02-10-2021) வருமாறு:

‘மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேரத் தலைவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் இரண்டு செய்திகளைச் சொல்கிறது.

கடந்த மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருக்கு முதுகெலும்பு இல்லை என்பதையும் - கடந்த மூன்று மாத கால முதலமைச்சர்தான் உண்மையான ‘முழுமையான' முதலமைச்சர் என்பதையும் டெல்லி உணர்ந்திருப்பதை இந்த நியமனம் சொல்லி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்ன அரசு தான் பா.ஜ.க அரசு. உச்சநீதிமன்றம் அதில் உறுதியாக இருந்ததால் அதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டார்கள்.

அப்படி ஏற்றுக்கொண்டாலும் அதனை தனித்த அதிகாரம் பொருந்திய அமைப்பாக உருவாக்கி விடாமல் தட்டிக் கழித்து வந்தார்கள். ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையின் கிளை அமைப்பாக மாற்றினார்கள். அத்தகைய மேலாண்மை ஆணையத்துக்கு ஒரு நிரந்தர, முழுநேரத் தலைவரைக் கூட நியமிக்காமல் மூன்றாண்டு காலமாக காலம் கடத்தி வந்தது பா.ஜ.க. அரசு.

தனது ஊழல் நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் என்று கடந்த கால பழனிசாமி அரசு, காவிரியைக் கைகழுவிவிட்டது. ஆட்சி மாற்றம் நடந்து, முதன் முதலாக டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமரிடம் கொடுத்த 25 கோரிக்கைகளில் இது மிக மிக முக்கியமானது.

ஒன்றிய நீர்வளத்துறை ஆணையரையே, காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராக கூடுதல் பொறுப்பு கொடுத்திருந்ததை மாற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர, முழுநேர, முழுமையான தலைவரை நியமிக்க பிரதமரை வலியுறுத்தினார் முதலமைச்சர். இதைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதியன்று சவுமித்ரா குமார் ஹல்தார் இதன் முழுநேரத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு ஒன்றிய அமைச்சரவை முழு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது. இது சாதாரணமாக நடந்துவிடவில்லை. உரிமைக்குப் போராடும், வாதாடும் ஒரு அரசு தமிழ்நாட்டில் அமைந்ததால் நடந்திருக்கும் நியமனம் இது. 2016 ஆம் ஆண்டு முதல் காவிரி விவகாரத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு ‘தண்ணி' காட்டி வந்தது. ‘காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது' என்று உச்சநீதிமன்றத்தில் சொன்ன அரசுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு. ‘கர்நாடகத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி விலகி உள்ளது. இதை விலக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்' என்று கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அப்போது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்ததால் அந்த மாநிலத்து மக்களை ஏமாற்ற காவிரியைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

“தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்கும் தங்களது பிரதிநிதிகளின் பெயரை நாளை மாலைக்குள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். மத்திய அரசு நான்கு நாட்களுக்குள் (4.10.2016) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டது. இதனை உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டு போன ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ஒரு வார காலத்தில் தலைகீழாக ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டத்தில் இதற்கான பல்வேறு விதிகள் இருக்கின்றன. எனவே இது குறித்து உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரம் இல்லை. எனவே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

“ஒரு வாரத்துக்கு முன் ஏற்றுக்கொண்டு, இன்று மாற்றி ஏன் மனு போடுகிறீர்கள்?” என்று நீதிபதிகள் கேட்டார்கள். ‘தவறாக ஒப்புதல் தெரிவித்து விட்டதாக' பா.ஜ.க அரசின் வழக்கறிஞர் சொன்னார். “இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் 18.10.2016 அன்றும் சொன்னார். நான்கு மாநில அரசுகளும் பா.ஜ.க அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தன. மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதி மன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று 9.11.2016 அன்று உச்சநீதிமன்றம் மகத்தான தீர்ப்பை அளித்தது. இதைத் தொடர்ந்து காவிரி பிரச்சினையை 2017 ஆம் ஆண்டு ஜூலை 11 முதல் செப்டம்பர் 20 வரையில் மொத்தம் 27 நாட்கள் விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம்.

இதனிடையே ஜெயலலிதா மரணம் அடைந்து பழனிசாமி முதலமைச்சர் ஆக்கப்பட்டுவிட்டார். ( 2017 பிப்ரவரி 14) ஓராண்டு கழித்து 2018 பிப்ரவரி 16-ல் தான் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. அப்போது தமிழகத்தின் தரப்பு வாதங்களை முறையாக, சரியாக வைக்க பழனிசாமியின் அரசாங்கம் தவறிவிட்டது. தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்து 10 டி.எம்.சி நீரை குறைத்துவிட்டார்கள்.

நிலத்தடி நீரைக் கணக்கிடக் கூடாது என்ற வாதத்தை அன்றைய அ.தி.மு.க அரசு சரியாக முன்வைத்து வாதிடவில்லை. தமிழக அரசு போட்ட மனுவும், வாதாடிய வழக்கறிஞர் வைத்த வாதமும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. நீதிபதிகளே, மனுவில் உள்ளதே சரியானது என்று குத்து மதிப்பாக எடுத்துக் கொண்டு தீர்ப்பு அளித்தார்கள்.

பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவையை கர்நாடக அரசு வாதமாக்கிய போது, சென்னை - சேலம் - ஈரோடு - தஞ்சை - திருச்சி ஆகிய மாநகராட்சிகளின் குடிநீர் தேவையை அ.தி.மு.க அரசு சொல்லவில்லை. 60 டி.எம்.சி கூடுதல் கேட்டு தி.மு.க ஆட்சியில் 2007 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அ.தி.மு.க அரசின் கையாலாகாத்தனத்தால் முன்னர் வாங்கியதில் 14.75 டி.எம்.சி.யைக் குறைவாகப் பெற்றோம். இறுதியாக ஒரு ஆணையம் உத்தரவுக்கு ஒரு நிரந்தரத் தலைவரை வாங்கக் கூட அன்றைய அ.தி.மு.க அரசுக்கு சக்தி இல்லை. 16.2.2018 இறுதித் தீர்ப்பு முதல் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கொடுக்க வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை இருக்கிறது. இவை அனைத்தையும் இப்போது நியமிக்கப்பட்டுள்ள முழுநேரத் தலைவர் பெற்றுத்தர வேண்டும்

Also Read: ’பிரதமரின் உண்மையான மனதின் குரல் இதுவாகதான் இருக்க வேண்டும்’ -மோடிஅரசுக்கு சுட்டிக்காட்டிய முரசொலி நாளேடு