Tamilnadu
“வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :-
சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் - சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம் வந்தவர் அருமைச் சகோதரர் வீரபாண்டி இராஜா அவர்கள். இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் இராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர்.
இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கழகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் சகோதரர் இராஜா அவர்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி இராஜாவைச் சந்தித்தேன். அன்போடு பேசிக் கொண்டு இருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை.
மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம். மருத்துவமனை வாசலில் தலைவர் கலைஞர் அவர்களே வாய் விட்டுக் கதறும் அளவுக்கு நம்மை விட்டுப் பிரிந்தார் அண்ணன் வீரபாண்டியார். இதோ இப்போது வீரபாண்டி இராஜா. வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை நானே எப்படித் தேற்றிக் கொள்வது? வீரபாண்டி இராஜா போன்றோர் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல!
எந்நாளும் அவர் புகழ் நிலைத்திருக்கும். கழகத் தொண்டர்கள் மனதில் எந்நாளும் இராஜா வாழ்வார். வீரபாண்டியார் குடும்பத்துக்கும் கழகச் செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!