Tamilnadu
80 வழக்குகள் நிலுவை; 60 இடங்களில் CCTV;சுகபோகமாக வாழ்ந்த பிரபல கொள்ளையன் திருட்டுகேசில் சிக்கியது எப்படி?
சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியார் இனிப்பகத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து 22 ஆயிரம் ரூபாய் பணம் கடந்த மாதம் 2 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கடையிலுள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தும், பணத்தை கொள்ளையடித்தபின் அவன் சென்ற வழித்தடங்களில் உள்ள சுமார் 60 சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தும் கொள்ளையில் ஈடுபட்டவனின் அடையாளங்களை போலீசார் கண்டறிந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சிவகங்கையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவன் பிரபல திருடனான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (54) என்பதும், அவன் மீது ஏற்கனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 80 காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட காளிதாஸ் இதுவரை 200-க்கும் மேற்பட்ட இடங்களில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும், 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டுதான் வெளியே வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஜனவரி மாதம் அமைந்தகரையில் உள்ள தனியார் இனிப்பகம், மார்ச் மாதம் வேப்பேரில் உள்ள மின்சாதன கடை மற்றும் ராஜமங்கலத்தில் உள்ள இனிப்பகத்தில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இவன் கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது.
Cow Bar கம்பியில் துணியைச் சுற்றி சத்தம் கேட்காத வண்ணம் இதுபோன்ற பணம் புழங்கும் கடைகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் காளிதாஸ், கொள்ளையடித்த பணத்தை சுகபோக வாழ்க்கை வாழ மட்டுமே பயன்படுத்தி வந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரபல திருடன் காளிதாஸை கொளத்தூர் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!