Tamilnadu

ஆடுகளைக் காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் மழைநீரில் மூழ்கி பலி.. கரூர் அருகே சோகம்!

கரூர் அருகே ஆடுகளை மீட்க முயன்றபோது தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் புனவாசிப்பட்டி சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மகன் நவீன்குமார் (13). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்கள் வசந்த் (13), கவின் என்கிற மயில்முருகன் (12). சிறுவர்கள் 3 பேரும் அப்பகுதியில் இன்று ஆடு மேய்த்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள தனியார் நிலத்தில் மண் எடுக்கப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த மழைநீர் குட்டையில் இறங்கிய ஆடுகளை மீட்பதற்காக குட்டையில் இறங்கிய 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். இதுகுறித்து, லாலாபேட்டை போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடுகளை மீட்க முயன்றபோது மழைநீரில் மூழ்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விபத்தில் சிக்கி மயக்கமடைந்தவரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்... நடந்தது என்ன?