Tamilnadu

"இத்தனை ஆண்டுகளாக யாரும் செய்யாததை 150 நாட்களில் செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக யாரும் செய்யாத திட்டங்களை பதவியேற்று 150 நாட்களில் செய்தவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத்தேர் பணிகள், வெள்ளி தேர் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அன்னதான கூடத்தில் பொதுமக்களுக்கு இலவச அன்னதானத்தையும் அவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோயிலில் முடி காணிக்கை செலுத்த கணினிமயமாக்கப்பட்ட பக்தர்கள் புகைப்படத்துடன் கூடிய கட்டணமில்லா சீட்டு வழங்கும் திட்டத்தையும் தமிழகத்தில் முதல்முதலாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்திளார்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு “தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் ஆனைக்கிணங்க 2வது சுற்று ஆய்வுகள் முக்கியமான கோயில்களில் செய்யப்பட்டு வருகின்றன. திருத்தணி கோயில் கோபுரத்தில் மழைநீர் கசிவதாக வந்த தகவலை அடுத்து உடனடியாக அது சரி செய்யப்பட்டுள்ளது.

திருத்தேர், தங்கத்தேர் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் உள்ளது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பணிகள் முடிவடைந்துவிடும். வெள்ளித்தேரும் முழுவதும் சிதிலமைடைந்துள்ளதால் அந்த பணிகளையும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முடி திருத்துபவர்களுக்கு மாதம் 5,000 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மொட்டை அடிப்பதை இலவசமாக்கி அதில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க பக்தர்களின் புகைப்படம் அடங்கிய சிலிப்புகள் வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கோயில்களுக்கு தேவைப்படும் குடிநீர், கழிவு நீர் அகற்றுதல், கழிப்பிட வசதிகள் போன்றவற்றை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜகோபுர பணிகள் 300 படிக்கட்டுகள் அந்தரத்தில் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக ரீதியாக கடந்த 25 ஆண்டுகளில் செய்யாத பணிகளை 150 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை தயங்காது.” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருத்தணி ஆறுமுகசாமி கோயில், திருவாலங்காடு காளி கோயில், வடாரண்யேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வினை மேற்கொண்டார்.

Also Read: “இனி தமிழ்நாட்டை பார்த்து கேரளா கற்றுக்கொள்ளும்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் !