Tamilnadu
நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து ரூ.2 கோடிக்கு கடன்... அ.தி.மு.க ஆட்சியில் மாபெரும் மோசடி!
அ.தி.மு.க ஆட்சியில் நகையே இல்லாமல் நகைக்கடன் வழங்கியதாக கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குரும்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பெருமளவில் நடைபெறுவதால், விவசாயிகள் தங்களது பொருளாதாரத் தேவைக்கு இந்த வங்கியையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, தமிழக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் 5 சவரன்களுக்கு குறைவான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, ஏழை, எளிய மக்களின் 5 சவரன் நகை நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து, அதில் நகை இருப்பதுபோல கூறி, கடன் வாங்கப்பட்டிருப்பது ஆய்வின்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வங்கியில் நகைக் கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் பார்த்தபோது, டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் போட்டுக்கொடுத்து அந்த பணத்தையும் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக வங்கியின் தலைவர் முருகேசபாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார் குமார், செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்சி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
நகையே இல்லாமல் நகைக்கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !
-
தொடங்கும் வடகிழக்கு பருவமழை... பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்... அமைச்சர்கள் கூறியது என்ன?
-
மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சென்னை மெரினா நீச்சல் குளம் : புதிய அம்சங்கள் என்ன ?
-
“AeroDefCon 2025” - மூன்று நாள் சர்வதேச மாநாடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !