Tamilnadu

"110 விதியின் கீழ் 535 அறிவிப்புகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை" : பேரவையில் நிதியமைச்சர் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30லிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாட தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30லிருந்து 40% ஆகஉயர்த்தப்படும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரி, அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

கொரோனாவால் அரசு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அண்ணா மேலாண்மை நிலைய பணியாளர்களுக்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும்.

53 வயதைக் கடந்த அலுவலர்களுக்குப் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அ.தி.மு.க ஆட்சியில் 110வது விதியின் கீழ் 1704 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் இவற்றில் 535 அறிவிப்புகள் நிறைவேற்றவில்லை. மேலும், ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் ரூ.2.40 லட்சம் கோடிகளுக்கான அறிவிப்புகளை அ.தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை.

இவ்வாறு நிதி அமைச்சர் அறிவித்தார்.

Also Read: ”நீட் தேர்வை எதிர்க்க தெம்பும் திராணியும் அற்றது அதிமுக” - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்!