Tamilnadu

சிறுமி உயிரிழப்பு எதிரொலி: தரமில்லாத உணவுகள் விற்பனை செய்தால் குண்டர் சட்டம்.. ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், அரணியில் உள்ள 7 ஸ்டார் உணவகத்தில் சிக்கின் பிரியாணி சாப்பிட்ட லோசினி என்ற சிறுமி உயிரிழந்தார். மேலும் இந்த உணவகத்தில் உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து போலிஸார் அந்த கடைக்குச் சீல் வைத்து, உணவக உரிமையாளர், சமையல் மாஸ்டர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தரமில்லாத உணவுகளை விற்றால் குண்டர் சட்டம் பாயும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த உணவகத்திலிருந்து உணவு சேகரித்து ஆய்வுக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரணி நகராட்சியில் உள்ள அனைத்து கடைகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் தவறுகள் கண்டறியப்பட்டால் கண்டிப்பாகச் சம்மந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருவண்ணாமலை மாவட்டங்களில் இயக்கும் உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மிகவும் சுகாதாரமாகவும், தரமானதாகவும் தயாரித்து வழங்கவேண்டும். சேலத்தில் இருந்து ஆய்வு முடிவு வந்த பிறகே உணவு சாப்பிட்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: "ஒரே ஒரு திருட்டு, ஓஹோனு வாழ்க்கை.. பேராசையால் போலிஸிடம் சிக்கிய வங்கி கொள்ளையர்கள்” : சிக்கியது எப்படி?