Tamilnadu

பணிச்சுமை குறைத்து வார விடுப்பு வழங்கிய தமிழக அரசு: காவலர்களின் காவலனான முதல்வர் -தினகரன் நாளேடு புகழாரம்

தமிழக அரசின் அணுகுமுறை காவல்துறை மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது என்று ‘தினகரன்’ நாளேடு ‘காவலர்களின் காவலர்’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தி.மு.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழக காவல்துறையில் 14,137 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்காக ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. காலியிடங்களை நிரப்புவதன் மூலம் காவலர்களின் பணிச்சுமை வெகுவாக குறையும்.

ஏற்கனவே காவலர்கள் ஓய்வின்றி பணிகளை தொடர்வதால், மன அழுத்தத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஓராண்டில் சுமார் 27 போலீசார் வரை தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. காவலர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது.

இதன் மூலம் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்வுகள், வெளியூர் சுற்றுலா என காவலர்கள் தங்களது விடுமுறையை கழித்து வருகின்றனர். தமிழக மாநகராட்சிகளில் பணியாற்றும் காவல்துறை துணை கமிஷனர்களின் அதிகார வரம்பை மாற்றியமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே காவல்துறையில் குற்றப்பிரிவு, சட்டம், ஒழுங்கு பிரிவினரிடையே ஒரு ‘‘ஈகோ மோதல்’’ இருந்தது.

குற்றப்பிரிவை விட, சட்டம், ஒழுங்கு பிரிவே உயர்வானது என்ற எண்ணம் இருந்து வந்தது. குற்ற சம்பவங்கள் தங்கள் அதிகார எல்லையில் நடக்கும்போது, யார் விசாரணை நடத்துவது என்ற குழப்பமும் நீடித்தது. இதனை தவிர்க்க குற்றம், சட்டம், ஒழுங்கு பிரிவுகளை ஒருங்கிணைத்து, மாநகராட்சிகளை இரு பிரிவுகளாகப் பிரித்து துணை கமிஷனர்களின் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் இனி யார் பெரியவர், யார் சிறியவர் என்ற பாகுபாடின்றி வழக்கு விசாரணை நடைபெறும்.

அரசின் இந்த அணுகுமுறை காவல்துறையினர் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தச் சூழலில், ஐகோர்ட் மதுரை கிளையில் கரூரை சேர்ந்த ஓய்வு காவலர் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள் என்.கிருபாகரன் (ஓய்வு), பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. காவலர் பிரச்சினைகளை தீர்க்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், காவல்துறை ஆணையம் அமைக்க வேண்டும். இதர அரசு துறையினரை விட 10 சதவீதம் கூடுதல் ஊதியம், காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயித்து, சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டுமென கூறி உள்ளனர்.

நாளை (செப்.13) சட்டப்பேரவையில் காவலர் மற்றும் தீயணைப்புத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிடுகிறார். இந்த அறிவிப்புகள் தங்களது வாழ்வில் வசந்தம் வீசும் அறிவிப்புகளாகவே இருக்குமென காவலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். காவலர்களின் காவலரான முதல்வர் அவ்வாறே செய்வார் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Also Read: “எதிர்க்கட்சியினரே பாராட்டும் வகையில் செயல்படும் தி.மு.க அரசு” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!